திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக இருப்பவர் வருண்குமார் ஐ.பி.எஸ். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூலை திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரை எடுத்து நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவத்திற்கு பிறகு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எஸ்.பி. வருண்குமார் சாதி பாகுபாடு பார்ப்பதாக குற்றம் சாட்டியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சசம்பவத்திற்கு பிறகு எஸ்.பி. வருண்குமாரை கண்டித்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமான கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தது. இதனை எஸ்.பி. வருண்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கண்டித்து கருத்து பதிவிட்டிருந்தார். மேலும் இது குறித்து கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி தில்லைநகர் காவல் நிலையத்தில் எஸ்.பி. வருண்குமார் புகார் அளித்தது அடுத்து 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளின் 5-வது மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசுகையில், நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம். நாதகவினால் தானும் தன்னுடைய குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இணைய குற்றம் செய்யும் கூலிகளை கண்காணிக்க 14சி என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறினார். நாம் தமிழர் கட்சி குறித்து ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சைபர் கிரம், இணையதள குற்றங்கள், மிரட்டல்களை கண்காணிப்பது, அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விரிவான விளக்கத்தை திருச்சி எஸ்.பி.வருண்குமார் ஆதாரங்களோடு விளக்கி பேசி இருந்தார். இந்நிலையில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் மீது தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவாலிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாம் தமிழர் கட்சி குறித்து அவதூறாக பேசி வருவதாகவும், பொய் வழக்கு பதிந்து தாக்குதல் நடத்துவதாகவும் நா.த.க. வின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் புகார் அளித்துள்ளார்.