திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்குறைதீர் கூட்டம் இன்று நடந்தது கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெஷ்மியிடம்
சங்கத் தலைவர் சின்னதுரை, செயலாளர் பிரபு ஆகியோர்
கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாநகரத்தில் பொது மக்களின் நன்மைக்காக தினசரி காந்தி மார்க்கெட் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ்தான் காந்தி மார்க்கெட் இயங்கி வருகிறது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமார் 500 கடைகள் உள்ளது. மேற்படி காந்தி மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் பல்வேறு காய்கறிகள், பழங்கள், வாழைக்காய், தக்காளி உள்ளிட்ட பொருள்கள் லாரிகளில் வரும். எனவே காந்தி மார்க்கெட்க்கு வரகூடிய காய்கறிகளை இறக்குவதற்கும், ஏற்றுவதற்கும் என்று சுமார் 2500 சுமை பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவ்வாறு பணிபுரியும் தொழிலாளர்களில் B.A.பட்டதாரிகள், பாலிடெனிக், ITI, 12ம் வகுப்பு படித்தவர்கள் என 25% இருக்கிறார்கள். மேற்படி தொழிலாளர்கள் அனைவரும் ஒவ்வொரு கடையிலும் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து வருகிறார்கள். வியாபாரம் செய்து வரும் கடை உரிமையாளர்கள் அவர்களுக்கென்று பல்வேறு சங்கங்களை வைத்துள்ளார்கள். அதுபோல் சுமை பணி தொழிலர்களும் தங்களுக்கென்று பல்வேறு சங்கங்களை வைத்துள்ளார்கள். எங்கள் சங்கத்தில் சுமார் 600 தொழிலாளர்கள் சுமை ஏற்றுவது, இறக்குவது ஆகிய தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.திருச்சி மாநகரத்திலுள்ள காந்தி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது. அவ்வாறு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் சங்கமும் மற்றும் தொழிலாளர்கள் சங்கமும், பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளார்கள். இருப்பினும் தமிழ்நாடு அரசு காந்தி மார்க்கெட்டை மதுரை ரோடு பஞ்சப்பூர் அருகே மாற்றுவதற்கு முடிவு செய்து அதனடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் காந்தி மார்க்கெட்டிலுள்ள உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது. ஆலோசனை கூட்டத்தில் உரிமையாளர்களுக்கு என்ன தேவைகள் என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது. ஆனால் காந்தி மார்க்கெட்டில் வேலை பார்க்க கூடிய சுமை பணி தொழிலாளர்கள் நலன் குறித்து இதுவரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆலோசனை கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை.
திருச்சி மாநகரத்தில் உள்ள காந்தி மார்க்கெட்டை மாற்றும் முடிவில் எவ்வித மாற்றம் இல்லை என்ற அடிப்படையில் அதற்குண்டான வேலைகள் நடந்து வருவதாக அறிகிறோம்
மேற்கண்ட சூழ்நிலையில் காந்தி மார்க்கெட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு, வேலை உத்தரவாதம் மற்றும் புதிதாக ஏற்படவுள்ள மார்க்கெட்டில் தொழிலர்களுக்குரிய வசதிகள் ஆகியவைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு அவர்கள் நலனை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
எனவே காந்தி மார்க்கெட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு, வேலை உத்தரவாதம் மற்றும் புதிதாக ஏற்படவுள்ள மார்க்கெட்டில் தொழிலர்களுக்குரிய வசதிகள் குறித்து காந்தி மார்க்கெட்டில் பணிபுரியும் சங்க பிரதிநிதிகளை அழைத்து ஓர் ஆலோசனை கூட்டம் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..