சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே விவசாயி வீட்டில் 2 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொள்ளையடித்த கொள்ளையன், சினிமா பட பாணியில் சிக்கியுள்ளார். வடிவேலு இப்படி ஒரு படத்தில் மிளகாய் பொடியால் சிக்குவாரோ, அதேபோல் திருட வந்த இடத்தில் பெயிண்ட் பட்ட காலுடன் தப்பி சென்ற போது கால்தடம் காட்டிக்கொடுத்துள்ளது.. எப்படி போலீசார் பிடித்தார்கள் என்பதை பார்ப்போம்.சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே குண்டுமலைகாடு பகுதியை சேர்ந்த 45 வயதாகும் பழனியப்பன் என்பவர் விவசாயி ஆவார். இவருக்கு சொந்தமாக தோட்டம் இருக்கிறது. இவர், கடந்த அக்டோபர் 13-ந் தேதி தோட்ட வேலைக்காக தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றுவிட்டார். இதை கவனித்த கொள்ளையன் வீடு புகுந்து 2 பவுன் தங்க நகைகள், ரூ.1½ லட்சம் கொள்ளையடித்துள்ளான். விவசாயி பழனியப்பன், வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் தங்க நகை பணம் காணாமல் போனதைக் கண்டு பழனியப்பன் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.கொள்ளை நடந்த வீட்டை போலீசார் நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது அவர்கள் நகை- பணத்தை திருட வெளியூர் நபர் வரவில்லை என்பதை கண்டுபிடித்தனர். உள்ளூர் நபரே இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருப்பதை உறுதி செய்தனர். வீட்டில் இருந்த தடயங்களை பதிவு செய்ததில் கொள்ளை நடந்த வீட்டில் கீசெயின் ஒன்று கிடந்தது. அந்த கீசெயினை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஆங்கில எழுத்துக்கள் இருந்தன. அது யாருடையது என்பதை போலீசார் விசாரித்தார்கள்.இதேபோல் கொள்ளை நடந்த வீட்டில் பெயிண்ட் டப்பா ஒன்று இருப்பதை பூலாம்பட்டி போலீசார் கண்டெடுத்தனர். கொள்ளையில் ஈடுபட்ட நபர் அந்த பெயிண்ட் டப்பாவை தவறுதலாக கீழே தள்ளி விட்டு சென்றதையும் கண்டனர். கொள்ளையன் தட்டிவிட்டதால் டப்பாவில் இருந்த பெயிண்ட் கீழே கொட்டியிருந்தது . கொள்ளையில் ஈடுபட்ட நபர், அந்த பெயிண்ட்டில் மிதித்துள்ளார். பெயிண்ட் பட்ட காலுடன் அந்த நபர் வீட்டில் இருந்து வெளியேறி தனது வீட்டுக்கு சென்றுள்ளார் என்பதை போலீசார் ஊகித்தனர்.இதனிடையே மழை காலம் என்பதால் அந்த கால் தடம் சிமெண்டு சாலையில் சுவடுகளாக பதிவாகி இருந்தது. அதை பின்தொடர்ந்து சென்ற போலீசார் அதே தெருவில் முருகன் (21) என்பவரது வீடு வரை கால்தடம் இருந்ததை கண்டனர். அதன்பிறகு இல்லை. உடனே போலீசார் கைப்பற்றிய கீசெயினில் இருந்த சாவியை கொண்டு முருகன் வீட்டை திறந்தனர். பூட்டு திறந்து கொண்டது. உடனே கொள்ளையில் ஈடுபட்டது முருகன் என்பதை போலீசார் உறுதி செய்தனர். முருகனை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் முருகன், பழனியப்பன் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் முருகனை கைது செய்து அவரிடம் இருந்து 2 பவுன் நகை, ரூ.1.50 லட்சத்தை மீட்டனர்.