தஞ்சாவூர்:”கிரிமினல் வழக்கு உள்ளவர்கள் வேட்பாளராகப் போட்டியிடலாம் எனும் போது, முகவராக இருக்கக் கூடாதா?” எனத் தஞ்சை தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அதிரடிப் புகார் கிளம்பியுள்ளது.தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எஸ். கரிகாலசோழன் சார்பில், அவரது தலைமைத் தேர்தல் முகவரும், வழக்கறிஞருமான எம். சகிலா தேவி, இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு அவசர மின்னஞ்சல் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.வழக்கு இருந்தால் தடையா?அதில் அவர் கூறியிருப்பதாவது:தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வேட்பாளர்கள் கூட்டத்தில், ‘கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் வாக்கு எண்ணிக்கை முகவர்களாக (Counting Agents) நியமிக்கப்படக் கூடாது’ என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இது சட்டத்திற்குப் புறம்பானது.சட்ட முரண்பாடு:மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8-ன் படி, கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள ஒரு நபர் தேர்தலில் போட்டியிட்டுச் சட்டமியற்றும் இடத்திற்கே செல்ல முடியும். அவ்வாறிருக்கையில், அதே காரணத்தைக் கூறி ஒரு முகவரைத் தடுப்பது பாரபட்சமானது. ‘குற்றம் நிரூபிக்கப்படும் வரை எவரும் நிரபராதியே’ எனும் அடிப்படை நீதிக்கு இது எதிரானது.ஆணையத்தின் விதி என்ன?தேர்தல் ஆணையத்தின் 2014-ம் ஆண்டு சுற்றறிக்கை (No. 464/INST/2014/EPS) மற்றும் முகவர்களுக்கான கையேடு (பத்தி 5.1)-ல், முகவர்களுக்கென எவ்வித பிரத்யேகக் கல்வித் தகுதியோ, ‘குற்றப் பின்னணி இல்லாத’ சான்றிதழோ அவசியம் எனக் குறிப்பிடப்படவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு வளையத்தில் உள்ளவர்கள் மட்டுமே முகவராகத் தடை செய்யப்பட்டுள்ளனர்.விளக்கம் தேவை:எனவே, மாவட்ட நிர்வாகம் எந்த விதியின் கீழ் இக்கட்டுப்பாட்டை விதிக்கிறது எனத் தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். சட்டப்படி தகுதியுள்ள யாரையும் முகவராக நியமிக்க வேட்பாளருக்கு உரிமை உண்டு. இதில் தேவையில்லாத முட்டுக்கட்டைகளை அதிகாரிகள் ஏற்படுத்தக்கூடாது.இவ்வாறு அந்தப் புகாரில் வழக்கறிஞர் சகிலா தேவி குறிப்பிட்டுள்ளார்.இந்த விவகாரம் தஞ்சை தேர்தல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
