பழிக்கு பழி வாங்க மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைகாளி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு புழல் சிறைச்சாலை கடந்த ஜனவரி 24 ந்தேதி சென்றபோது பெரம்பலூர் அருகேயுள்ள திருமாந்துறை உணவகம் ஒன்றில் பதினைந்துபேர்களை கொண்ட கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று போலீசார் காயமடைந்தனர். சுதாரித்துக்கொண்ட போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தவும் மர்ம கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பித்தது.
தமிழ்நாடு தாண்டி இச்சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியதோடு போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை என அரசியல்கட்சியினர்,சமூக ஆர்வலர்களின் விமர்சனத்தை பொதுவெளியில் எதிர்கொண்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டைநடத்தினர்.

இது தொடர்பாக பிரபல ரவுடி கொட்டு ராஜா என்பவரை போலீசார் கைது செய்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து வந்தபோது அவர்களின் ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வனப்பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக கொட்டு ராஜா தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஆயுதங்களை கைப்பற்றுவற்காக போலீசார் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றபோது யாரும் எதிர்பாரா வகையில் போலீசார் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசிய கொட்டு ராஜா அரிவாளால் எஸ்.ஐ சங்கர் வெட்டிவிட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். அப்போது மங்களமேடு காவல் ஆய்வாளர் நந்தகுமார் துப்பாக்கியால் சுட்டதில் அழகுராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் கூறிய விளக்கத்தில்
ரவுடி அழகுராஜ் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக சொன்ன இடத்திற்கு அழைத்துச் சென்றோம். நாட்டு வெடிகுண்டை எடுத்து தருவது போல பாவனை செய்து போலீசார் மீது வீசி தப்பிக்க முயற்சி செய்தார். அழகுராஜ் வீசிய நாட்டு வெடிகுண்டு வெடித்து காவல்துறை வாகனம் சேதமடைந்தது. ரவுடி அழகுராஜை பிடிக்க முயன்ற எஸ்.ஐ. சங்கரை ஆயுதங்களால் தாக்கியதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. எஸ்.ஐ.யை தாக்கிய அழகுராஜாவை மங்களமேடு ஆய்வாளர் நந்தகுமார் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்தார். மருத்துவமனையில் அழகுராஜாவை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். போலீசார் மீது கை வைத்த ரவுடி கும்பலில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பொது வெளியில் அத்துமீறி நடப்பவர்களுக்கு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.
எம்.எஸ்.மதுக்குமார்.
