வழக்கம் போல விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த பயணிகள் ரயில், அரியலூர் ரயில் நிலையத்தில் நேற்று அக்டோபர் 20 ந்தேதி காலை 7.30 மணியளவில் வந்தடைந்து சில நிமிடங்கள் நின்று மீண்டும் புறப்பட்டபோது, பெண் பயணி ஒருவர் அவசர அவசரமாக ஓடி வந்து, ஏற்கனவே நகரத் தொடங்கிய ரயிலில் ஏற முயன்ற போது சமநிலையை இழந்தவர் தலை குப்புற பிளாட்பாரத்தில் விழப் போனார். இதை கவனித்த அங்கு பணியில் இருந்த ரயில்வே தலைமை காவலர் செந்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் துரிதமாக செயல்பட்டு, அந்த பெண்ணை மீண்டும் ரயிலுக்குள் தள்ளி உயிர் தப்பச் செய்தார்.
உடனே ரயில் நிறுத்தப்பட்டு சில நொடிகளுக்கு பிறகு புறப்பட்டு சென்றது.சமயோசிதமாக செயல்பட்டு பெண் பயணியின் உயிரை காப்பாற்றியரயில் நிலைய தலைமை காவலர் செந்திலுக்கு ரயில்வே அதிகாரிகள், சக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சம்பவம் முழுவதும் பதிவாகி இருந்த நிலையில் தற்போது பெண் பயணி உயிர் காப்பாற்றிய நொடிகளின் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றன.
எம்.எஸ்.மதுக்குமார்.
