HomeUncategorizedத.வெ.க. ஆட்சிக்கு... எடைத்தேர்தலா? இடைத்தேர்தலா?

த.வெ.க. ஆட்சிக்கு… எடைத்தேர்தலா? இடைத்தேர்தலா?

தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஆட்சியமைத்து 100 நாட்கள் கழித்த பிறகு மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு நடக்கும் தேர்தல் த.வெ.க. ஆட்சிக்கு ‘எடைத்தேர்தலா?’ என்பது பற்றி பார்ப்போம்.

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதிமுக, நாதகஆகியவை வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன. த.வெ.க. ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆளுக்கொரு தொகுதியில் வேட்பாளர்களை அறிவித்திருப்பதால் 5 முனைப் போட்டி நிலவுவது உறுதியாகிவிட்டது.

த.வெ.க.வினர் மீண்டும் தங்களது பலத்தை நிரூபிக்க இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையிலும், சமூக வலைதளங்களை தொடர் வோரின் வாக்குகளை கைப்பற்றும் நோக்கிலும் களப்பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். ‘ரீல்ஸ்’ பிரச்சாரம் மூலம் தவெக ஆட்சியைப் பிடித்ததாக எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில், இடைத்தேர்தலில் தவெகவுக்கு போட்டியாக திமுகவும், அதிமுகவும் ‘ரீல்ஸ்’ பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றன.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி ஒரு முன்னோட்டம்..!

கடந்த 1971 முதல் 2026 வரை நடந்த 13 சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க. 7 முறையும், தி.மு.க. 5 முறையும், 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரலாற்று சாதனை படைத்து வெற்றி பெற்றாலும் மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 2021 மற்றும் 2026 என இரண்டு தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். இவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால்தான் இடைத்தேர்தல் நடக்கிறது.

மதுராந்தகம் (தனி) தொகுதியில் வழக்கறிஞரும், திமுக சட்டத்துறை இணைச் செயலாளருமான ஐ.பரந்தாமன் போட்டியிடுவதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் கோ.ஜானகி ராமனும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி. சுகந்தியும் போட்டியிடுகின்றனர்.

அ.தி.மு.க. செல்வாக்கான தொகுதியாக அறியப்படும் மதுராந்தகத்தில் தி.மு.க.விற்கும் செல்வாக்கு இருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத் களத்தில் இறங்கியிருக்கிறார். இவர் 2011 சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தளவில் வேட்பாளர் முகம் முக்கியம் என்றாலும், போட்டியிடும் கட்சியைப் பொறுத்துதான் வெற்றி வாய்ப்பு உள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருப்பது அக்கட்சிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அதே போல் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இருப்பதும் அக்கட்சிக்கு கூடுதல் பலம். தி.மு.க. அ.தி.மு.க. இரண்டு தரப்பிலும் பலமான வேட்பாளர்களை களத்தில் இறக்கியிருந்தாலும் தற்போதைய நிலவரப்படி அ.தி.மு.க.வுக்கு சாதகமாகவே தொகுதி பார்க்கப்படுகிறது. எனினும் தி.மு.க.வும் பலமான வேட்பாளரை களத்தில் இறக்கியிருக்கிறது. த.வெ.க. வேட்பாளர் பிரச்சாரத்தில் பம்பரமாக சுற்றி சுழன்று வருகிறார்.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி ஒரு முன்னோட்டம்..!

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் 1971ல் இருந்து 2026 வரை நடந்த 13 சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க. 6 முறையும், தி.மு.க. 5 முறையும், பா.ம.க. ஒருமுறையும், காங்கிரஸ் ஒருமுறையும் வென்ற தொகுதி! கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட எல்.முருகன் வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பொ.சத்தியபாமா வெற்றி பெற்றார். இவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்ததால்தான் தற்போது இடைத்தேர்தல் நடக்கிறது. த.வெ.க. சார்பல் வேட்பாளராக சத்தியபாமா களமிறங்கியிருக்கிறார்.

திமுக சார்பில் வழக்கறிஞர் அணி கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் சுகன்யாவும், அதிமுக சார்பில் புறநகர்மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளராக உள்ள பானுமதியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் சார்பில் மு.கார்த்திகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் வேட்பாளராகக் களம் காண்கிறார்.

தாராபுரம் தொகுதியைப் பொறுத்தளவில் கொங்கு வேளாளர் சமுதாய மக்கள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்கள் என்பதால், அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவும் களத்தில் இறங்கி அதிரடியாக வேலை பார்த்து வருகிறார். தி.மு.க.வும் ‘வெற்றி பெற்றே ஆகவேண்டும்’ என்ற நோக்கில் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர். தாராபுரம் தொகுதியைப் பொறுத்தளவிலும் விஜய் பிரச்சாரத்திற்கு வந்தால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என உற்சாகமாக இருக்கின்றனர் த.வெ.க.வினர்!

மூன்று கட்சிகளின் முக்கியமான தேர்தல் வியூகத்தைப் பார்ப்போம்… மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தி.மு.க. வேட்பாளரை அறிவித்ததுதான், அ.தி.மு.க., த.வெ.க.வை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை களங்கப்படுத்தும் வகையில் அமைச்சர்கள், முதல்வர்கள் பேசி வருவதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக வேட்பாளரை அறிவித்திருக்கிறது அறிவாலயம். தேர்தல் பிரச்சாரக் களத்தில், ‘ஒரு தலைமுறையையே தவெக ஏமாற்றி விட்டது… தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை’ என்பதை மையமாக வைத்து பிரச்சாரத்தில் வேலை பார்த்து வருகிறது தி.மு.க.!

அ.தி.மு.க.வோ, ‘2026 சட்டமன்றத் தேர்தலின் போது விஜய் அலை அடித்த நிலையிலும் இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அந்தக் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு, மீண்டும் த.வெ.க.வில் அதே வேட்பாளர்கள் களமிறங்குவதை எடுத்துச் சொல்லி, த.வெ.க.வுக்கும் அந்த வேட்பாளர்களுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்று களத்தில் இறங்கி தீவிரமாக வேலை பார்த்து வருகிறது அ.தி.மு.க.! மதுராந்தகத்தில் பா.ம.க.வின் ஆதரவோடு வெற்றி பெறுவோம் என்ற நம்பக்கையில் இருக்கிறது. தாராபுரத்தில் சமுதாய வாக்குகள் அ.தி.மு.க.வை கரை சேர்த்துவிடும் என நம்புகிறார்கள். இதற்கிடையே, ‘மாற்றம் வேண்டும்’ என வாக்களித்த மக்கள் ‘ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்’ என்பதைச் சொல்லி அ.தி.மு.க. வாக்கு கேட்டுவருகிறது.
விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு விண்ணைத் தொட்டிருக்கும் விலைவாசி உயர்வும் அ.தி.மு.க.விற்கு சாதகமாக இருக்கிறது. எனவே, த.வெ.க.வின் ஆட்சிக்கு இது எடைத்தேர்தலாக அமையும் என்ற நம்பக்கையில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

த.வெ.க.வினரோ, ‘‘ஆட்சியமைந்து 100 நாட்களில் லஞ்ச லாவண்யம், ஊழலை முடிந்தளவிற்கு ஒழித்திருக்கிறார் முதல்வர் விஜய். தமிழகத்தின் கஜானா சுத்தமாக துடைக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்ற கோரிக்கையையும் மக்கள் முன்பு வைத்திருக்கிறார்கள். தமிழக மக்களைப் பொறுத்தளவில் இலவசங்கள் தருவதைவிட, ஊழலை ஒழித்தாலே போதும், அதற்கான நம்பிக்கை விஜய்யிடம் இருந்து எங்களுக்கு கிடைத்திருக்கிறது. எனவே, முதல்வராக விஜய்தான் தொடரவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதால், இரண்டு தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெறும். எனவே, இரண்டு தொகுதி இடைத்தேர்தல் என்பது எடைத்தேர்தலாக இருக்காது… விஜய் முதல்வராக நீடிக்க வேண்டும் என்பதற்கான தேர்தலாக இருக்கும்’’ என்கின்றனர்.

ஆகமொத்தத்தில் இரண்டு தொகுதி இடைத் தேர்தல் எடைத்தேர்தலாக இருக்காது. விஜய்யின் ஊழலற்ற ஆட்சியை தொடர வைப்பதற்கான தேர்தலாக இருக்கும் என்பதுதான் கள நிலவரமாக இருக்கிறது. பொறுதிருந்து பார்ப்போம்..!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments