அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் அண்ணா, கருணாநிதி சிலைகள் திறப்பு விழா மற்றும் தேவனூரில் மறைந்த முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் பெயரில் நூலக திறப்பு விழா நேற்று11.03.26 புதன்கிழமை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் நடைபெற்றது
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து, 100 உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி, அண்ணா, கருணாநிதி சிலைகளையும், ஒன்றிய திமுக அலுவலகத்தையும் தொடர்ந்து, தேவனூரில் நூலகத்தை திறந்து வைத்து பேசியது:
சிலைகளையும், நூலகத்தையும் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அரியலூர் மொழிப்போர் தியாகி சின்னசாமி பிறந்த மண். கல்லக்குடி ரயில் போராட்டத்தின் போது கருணாநிதி அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார். கருணாநிதிக்கு உறுதுணையாக இருந்தவர் சிவசங்கர் தந்தை சிவசுப்பிரமணியம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர். எனவே இந்த மண்ணுக்கு அமைச்சர் பதவி கிடைத்து சிறப்பாக சிவசங்கர் பணி செய்கிறார். நவீன பேருந்துகள், நவீன பணிமனைகளை கொண்டு வந்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக்குகின்ற எண்ணம் அமித்ஷாவுக்கு நிச்சயம் கிடையாது. பீகாரில் பார்த்திருப்பீர்கள், 10 முறை முதலமைச்சரான நிதிஷ்குமாரையே ஏமாற்றியிருக்கிறார்கள். அமித்ஷாவின் நோக்கம் அ.தி.மு.க-வை எப்படியாவது அபகரித்துவிடலாம் என்பதுதான். அப்படிப்பட்ட அ.தி.மு.க இன்றைக்கு அமித்ஷாவிடம் அடிமை அ.தி.மு.க-வாக மாறியுள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியிடம் நம் உரிமைகளை அடகு வைக்கப் பார்க்கிறார். அரியலூர் மாவட்டத்தை திமுக கோட்டையாக சிவசங்கர் மாற்றி உள்ளார். திமுக ஆட்சியில் சுகாதாரம், கல்வி, சாலை, பள்ளி கட்டிடம் என மாவட்டத்தில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மகளிர் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெண்களுக்கு முக்கிய திட்டங்களாகும். மத்திய அரசு உரிய நிதியை தரவில்லை. குடிநீர், 100 நாள் வேலை திட்டங்களை முடக்குகிறது. இதற்கு அதிமுக துணை நிற்கிறது. தற்போது துணை நிற்கிறது என சொல்ல முடியாது. ஒண்ணுக்குள்ள ஒண்ணாகி விட்டது என சொல்லலாம். விரைவில் பாஜகவசம் அதிமுகவை எடப்பாடி சரண்டர் செய்வார். பாஜகவுக்கு எடப்பாடி பயப்படலாம். ஸ்டாலின் பயப்படமாட்டார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாசிச பாஜக, அதிமுவுக்கு உரிய பாடத்தை புகட்ட வேண்டும்.
200 தொகுதிகளில் வெற்றிப்பெற அனைவரும் பணியாற்ற வேண்டும். அதிமுக கூட்டணியை கிளீன் போல்ட் ஆக்க வேண்டும். அதற்கு அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளை தொடக்கமாக வெற்றிப்பெற வைக்க வேண்டும் என கூறினார். நிகழ்ச்சியில் திமுக முண்ணனி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
எம்.எஸ்.மதுக்குமார்.
