விராலிமலை முருகன் கோவிலில் உள்ள அறிக்கை பலகை வாசங்களை மாற்றக்கோரி திருவடிக்குடில் சுவாமிகள் விடுத்துள்ள அறிக்கையில் : புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருள்மிகு முருகன் திருக்கோயில் தொன்மை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள் ஞானம் வழங்கும் தலமாகும்.
இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடெங்கிலுமிருந்து வந்து தரிசித்துச் செல்கின்றனர். அடியேனும் சென்று தரிசித்து வந்தேன்.மலை அடிவாரத்தில் இருந்து கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுப் பாதையின் நடுவில் சந்தானக் கோட்டம் என்ற இடம் இருக்கிறது.
திருப்புகழ் பாடிய சந்தக்கவி
அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் அட்டமாசித்தியை அருளிய இடமாகும்.
இங்கு இடும்பன் கோயில், சொக்கநாதர் ஆலயம் மற்றும் குகைக்குச் செல்லும் பாதையும் அமைந்துள்ளது. இவ்இடத்தில் ஆலய நிர்வாகத்தால் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில்;
காதலர்கள் அமர அனுமதி இல்லை. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மீறினால் காவல்துறை வசம் ஒப்படைக்கப்படுவீர்.
என்று எழுதப்பட்டுள்ளது.
காதல் என்கின்ற பெயரில் பொழுதுபோக்க வரும், ஒழுக்கக்கேடான கூட்டத்திற்காகவும் வரம்பு மீறும் காதலர்களுக்காகவும் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு தான் இப்படிபட்டவர்களை தடுக்க வேண்டியதும் அவசியமே. ஆனால் இந்த வாசகங்கள், “காதல்” என்கின்ற மனித குலத்தின் உன்னதமான உணர்வின் மீதே தவறான கண்ணோட்டத்தை எழுப்பும் விதமாக அமைந்துள்ளது.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி…
என்று பாடினார் திருஞான சம்பந்தர்.
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே என்றார் அப்பர் பெருமான்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் – பரவை நாச்சியாரின் காதல் இறைவனால் இணைத்து வைக்கப்பட்ட காதல்.
காலம் உண்டு ஆகவே காதல் செய்து உய்மின்… என்றார் மாணிக்கவாசகர்.
மேலும், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார் காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட ஆழ்வார்கள், நாயன்மார்களும் வள்ளலார் போன்ற அருளாளர்களும் இறைவனை போற்றிய இலக்கியங்களில் காதல் சுவை உள்ளது. புராணச் செய்திகள், வாழ்வியல், தத்துவம், அகச் சான்றுகள், சமயம் மற்றும் அறக்கோட்பாடுகளை உள்ளடக்கிய 16 திருப்புகழ் பாடல்களால் விராலிமலை முருகப்பெருமானைப் போற்றிய அருணகிரிநாதர்,
சீரான கோல கால நவமணி…
என்று தொடங்கும் திருப்புகழில்,
“இருதாளும் ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும்”
என்று பாடினார். இதில் ஆராத காதல் வேடர் மடமகள் என்பது வள்ளியை குறிக்கும்.
உயிர்கள் ஒன்றின் மீது ஒன்று செலுத்தும் உயர்ந்த அன்பும் உயிர்களுக்கும் இறைவனுக்குமான ஒப்பற்ற அன்பும் காதல் என்றே குறிக்கப்பட்டது.
மனிதர்களில் ஆண் பெண்ணுக்கு இடையேயான உண்மையான காதலும்
உயிர்கள் இறைவன்பால் வைத்திருக்கும் தீராத காதலும் பெற்றோர் – குழந்தைகள்,
கணவன் – மனைவி, குரு – சீடன், தொழில் – தொழிலாளி, விவசாயம்- விவசாயம்,
கலை – கலைஞர்கள் இப்படி
உண்மையான காதலின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
விராலிமலை கோயில் பாதையில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகை
வாசகங்களை திருக்கோயில் நிர்வாகம் இப்படி மாற்றி அமைக்கலாம்.
“இளம் ஜோடிகள் கவனத்திற்கு!
இங்கு அரட்டை அடிக்க வேண்டாம்!
(உங்களை கண்காணிப்பு கேமரா கவனிக்கிறது) மீறினால் காவல்துறை வசம் ஒப்படைக்கப்படுவீர்! “
வெற்றுக் கூட்டத்தை விரட்டி அடிக்கும் வாசகத்தில் காதலை கொச்சைப்படுத்த வேண்டாம். மன அமைதிக்காக ஆலயத்திற்கு வரும் உண்மையான காதலர்கள் மற்றும் இளம் தம்பதியரைக் கூட இந்த வாசகங்கள் அச்சுறுத்த வாய்ப்பு உள்ளது.
யாராக இருந்தாலும் பொது இடங்களில் தனிமனித ஒழுக்கம் மற்றும் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. என கோரிக்கை வைத்துள்ளார்.
எம்.எஸ்.மதுக்குமார்.
