ஜெர்மன், இங்கிலாந்து என வெளிநாட்டு முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து தமிழக தொழில்துறையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் களமிறங்கி இருக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டு தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர்கள் ஆகியோருக்கு வெளிநாட்டில் உள்ள ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்திருக்கும் தமிழக அரசு, சுமார் 13 ஆயிரம் இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கும் வழிவகை செய்துள்ளதுள்ளது.
வெளிநாட்டில் வாழும் தமிழக மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் அக்கறை கொண்டு மறைந்த தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள், ‘அயலக தமிழர் நல வாரியம் உருவாக்கப்படும்’ என கடந்த 2011ஆம் ஆண்டு அறிவித்தார்.

அதற்கான செயல்திட்டங்கள் தீட்டப்பட்ட நிலையில், அதற்கு பின்பு வந்த அதிமுக ஆட்சியின் போது அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர், பத்தாண்டுகள் கழித்து மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவியேற்ற பிறகு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ் அயலக தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் அயலக தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் கடந்த ஆண்டு இணைந்து உருவாக்கிய, ‘சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றம்’ தற்போது 28 நாடுகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு செயல்பட்டு வருகிறது. அப்படி வெளிநாடுகளில் வசிக்கும் பொறியாளர்களில் பலர் சரக்குப் போக்குவரத்து, சுற்றுலா, ரியல் எஸ்டேட், தொழிற்சாலைகள் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதோடு வெற்றிகரமான தொழில் முனைவோர்களாகவும் சிறந்து விளங்கி வருகிறார்கள்.
ஆகவே, அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து தமிழ்நாட்டில் வாழும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான வேலைவாய்ப்பு வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் திட்டம் தீட்டப்பட்டு, தமிழக இளைஞர்களுக்கு பயிற்சியுடன் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அயலக தமிழர் நலத்துறையின் முன்னாள் ஆணையரும், சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றத்தின் தலைமை ஆலோசகருமான பி. கிருஷ்ணமூர்த்தி மற்றும் ‘டான்செம்’ அமைப்பின் கீழ் செயல்படும் உலகளாவிய பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் தலைமை நிர்வாக அலுவலர் லி. ஷாநவாஷ்கான் உள்ளிட்ட பலர் கடந்த மாதம் துபாய், குவைத், கத்தார், சவுதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகளுக்குச் சென்று அங்குள்ள சர்வதேச தமிழ் பொறியாளர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு தாயகம் திரும்பினார்கள். அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் சர்வதேச அளவிலான அயலக பொறியாளர்கள் மாநாடு நடக்கவிருக்கும் நிலையில், இது குறித்து, சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றத்தின் தலைமை மேலான் இயக்குனர் செல்வம் கூறும்போது, “தற்போது நடக்கவிருக்கும் இந்த சர்வதேச மாநாடு இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை சார்ந்த பல்துறை நிறுவனங்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் வரப்பிரசாதமாக அமையும் என நம்புகிறோம்.
இதில், கட்டுமானம், கனிமம், ஆட்டோ மொபைல், தளவாடப் போக்குவரத்து, மின்சாரம், தொழில்துறை உற்பத்தி நிறுவனங்கள் என பலதரப்பட்ட மிகப்பெரும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. மேலும், 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் 75க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைத்து தங்களைப் பற்றி இங்கு காட்சிப்படுத்த உள்ளதோடு, 70க்கும் மேற்பட்ட பல்துறை வல்லுனர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளதால் இந்திய பொருட்களுக்கு வெளிநாடுகளில் உள்ள சந்தை வளம் பற்றி நேரடியாக அறிந்து கொள்ள இது ஒரு மகத்தான வாய்ப்பாக இருக்கும்” என நம்பிக்கை தெரிவிக்க,
‘டான்செம்’ அமைப்பின் கீழ் செயல்படும் உலகளாவிய பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஷாநவாஷ் கானோ, “இந்த சர்வதேச மாநாட்டின் போது இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த 3 ஆயிரம் இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான பணி ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்க இருக்கிறார்” எனக்கூறி இன்ப அதிர்ச்சி அளித்தார்.
இது குறித்து மேலும் கூறிய அவர்,
“துபாய், குவைத், பஹ்ரைன், மாலத்தீவு போன்ற நாடுகளில் நிறைய ஐ.டி.ஐ. முதல் பொறியியல் வரை படித்த பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் அதிகம் வந்துள்ளன. அதே போல இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களோடும் வேலை வாய்ப்பிற்கான ஒப்பந்தங்களை நாம் போட்டுள்ளோம். அப்படிப் பார்த்தால், கிட்டத்தட்ட 13 ஆயிரம் வேலை வாய்ப்புகள் தற்போது தயாராக உள்ளன. அவர்களுக்கு மாதம் 40 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 2 லட்ச ரூபாய் வரை ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையின் சேர விரும்பும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு குறித்த பயிற்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள அழைக்கிறோம். இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு gcc.tansam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டும் விளக்கம் பெறலாம்” என்றார் ஷா நவாஷ்கான்.
ஜாக்பாட்டிற்கு தயாரா இளைஞர்களே..?