திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சியாமிளாதேவி அவர்களின் மேற்பார்வையில், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை திருச்சி சரக காவல் துணை கண்காணிப்பாளர் வின்சன்ட் அவர்களின் அறிவுரையின்படி, கரூர் மாவட்ட காவல் ஆய்வாளர் அரங்கநாதன் அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் அலகு காவலர்களான இளம்பரிதி, செந்தில்குமார் மற்றும் சுந்தரி ஆகியோர்கள் வேலாயுதம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்துறை பஸ் நிறுத்தம் அருகில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த (Ashok Leyland Dost) நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அவ்வாகனத்தில் ரேசன் அரிசியை கள்ளதனமாக கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தி வந்த நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டியை சேர்ந்த ராகுல் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 50 கிலோ எடை கொண்ட 30 பாலீத்தின் சாக்கு மூட்டைகளில் இருந்த 1500 கிலோ ரேசன் அரிசியையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் .