நெல்லுக்கு லாபகரமான விலை கேட்டு
டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதம்
அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி மாநகர தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் இன்று அண்ணாமலை நகரில் நடந்தது. மாவட்ட தலைவர் உமா காந்த்
தலைமை தாங்கினார்.
மாநில துணைத் தலைவர் மேகராஜன், மாநில நிர்வாகிகள் பரமசிவம், ஆண்டவர், செந்தில், மதி, ராஜ சுலோச்சனா, நீலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில தலைவர் பி.அய்யா கண்ணு
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் மழைக்காலங்களில் 25 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லையும், மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக கொள்முதல் செய்வதுடன், பிரதமர் மோடி கூறியது போல ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.54 தரவேண்டும் என்று மத்திய அரசை கேட்டு அடுத்த மாதம் (நவம்பர்) டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது,
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்
நெல் மூட்டைகளுக்கு லஞ்சம் கேட்பதை தமிழக முதலமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும் காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான கன அடி வெள்ள நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது அதில் 2000 கன அடி நீரை காவிரி அய்யாறு இணைப்பு கால்வாய் மேட்டூரில் இருந்து வெட்டி திருப்பி விட்டால் சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் ,அரியலூர் மாவட்டங்களில் 5 லட்சம் புஞ்சை நிலங்கள் நஞ்சை நிலமாகும். மேலும் ஆயிரக்கணக்கான ஏரி குளங்கள் நிரம்பி ஆயிரம் அடிக்கு கீழ் உள்ள நிலத்தடி நீர்மட்டம் 20 அடிக்கு வர வாய்ப்புள்ளது இதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
