Monday, June 22, 2026
No menu items!
HomeUncategorizedதஞ்சை மாவட்ட பத்திரப்பதிவுத்துறையில் மாவட்ட பதிவாளர் மணிகண்டன்… மனைப்பிரிவு வழிகாட்டி மதிப்பு நிர்ணயத்துக்கு 5 லட்சம்...

தஞ்சை மாவட்ட பத்திரப்பதிவுத்துறையில் மாவட்ட பதிவாளர் மணிகண்டன்… மனைப்பிரிவு வழிகாட்டி மதிப்பு நிர்ணயத்துக்கு 5 லட்சம் கேட்டதாக குற்றச்சாட்டு.!

நடவடிக்கை எடுக்க காத்திருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை.!

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை ஒரே கையில் பிடித்துக்கொண்டு “நான்தான் ராஜா” என்று நடமாடும் இன்சார்ஜ் மாவட்டப் பதிவாளர் இரா. மணிகண்டன் அவருக்கு உடந்தையாக சார்பதிவாளர் விஜயன், லஞ்சத்திற்கான தூதுவராக பெண் ஊழியர் தாரா இந்த மூவரும் சேர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவையே இருட்டடிப்பு செய்து, ரூ.5 லட்சம் லஞ்சத்திற்காகவும் பதவி உயர்வு பேராசைக்காகவும் அதிகார துஷ்பிரயோகத்தில் இறங்கிய இந்தப் பகீர் விவகாரம் இப்போது லஞ்ச ஒழிப்புத்துறை வாசலில் போய் நிற்கிறது. நான்கு மாவட்டம் ஆண்டவர் இப்போது விஜிலன்ஸ் முன் நிற்கப் போகிறாரா என்று பார்க்க நாமும் விசாரணையில் இறங்கினோம்!
தஞ்சாவூர் கீழவாசலைச் சேர்ந்த ஷாஜாத்தி பேகம் என்பவர், குடும்பக் கடனை அடைக்க தனக்குச் சொந்தமான நிலத்தை “வஹாப் நகர்” என்று பெயரிட்டு மனைப்பிரிவாக மாற்றினார். DTCP அனுமதி, பேரூராட்சி தீர்மானம், வரன்முறைக் கட்டணங்கள் எல்லாவற்றையும் பைசா பாக்கியில்லாமல் சட்டப்படி செய்தார். 7 கிரயப் பத்திரங்களும் அம்மாபேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவானது. சட்டம் தன் பக்கம் இருக்கிறது என்று நம்பி நிம்மதியாக இருந்தார் — ஆனால் அந்த நம்பிக்கையே மணிகண்டன் கூட்டணிக்கு வேட்டையாடுவதற்கான வாய்ப்பாகிவிட்டது!
ஆனால், பத்திரங்கள் பதிவான மறுகணமே இந்த அதிகாரிகளின் லஞ்சப் பசி கண்விழித்துக்கொண்டது! சட்டப்படி பதிவான ஆவணங்களை நிலம் வாங்கியவர்களிடம் கொடுக்காமல், ’47-A சந்தை மதிப்பு நிர்ணயம்’ என்ற போர்வையில் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் 170 நாட்களாக முடக்கி வைத்தனர் ஏன்? ஏனென்றால் கோப்பை முடக்கினால்தான் லஞ்சம் கேட்கலாம், லஞ்சம் கேட்டால்தான் பதவி உயர்வு கனவு நிறைவேறும் என்று கணக்கு போட்டார் மணிகண்டன்! அரசு அதிகாரி என்ற பதவியை லஞ்சம் வசூலிக்கும் கருவியாக மாற்றிக்கொண்டு ஆவணத்தை முடக்கி வைத்தனர்.
கோப்புகள் முடக்கப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷாஜாத்தி பேகம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை மனுதாக்கல் செய்தார் நீதிமன்றம், “60 நாட்களுக்குள் ஆவணங்களை விடுவிக்க வேண்டும்” என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது .[WP(MD)No.7504/2026]. அதன் பின்னரும், ‘சர்வே எண் விடுபட்டுள்ளது’ என்று கூறி மாவட்ட பதிவாளர் மணிகண்டன் தந்திரமாக அலைக்கழித்ததால், மனுதாரர் மீண்டும் நீதிமன்றம் சென்று திருத்த உத்தரவையும் [WMP(MD)No.8627/2026] வாங்கி வந்து மாவட்ட பத்திர பதிவுத்துறையில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த நிலையில், ஆவணங்களை விடுவிக்க மாவட்டப் பதிவாளர் மணிகண்டனுக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என மாவட்ட பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் தாரா தரப்பிலிருந்து மிரட்டல் வந்துள்ளது. அதற்கு ஷாஜாத்தி பேகம் உடன்படாததால், ஆத்திரமடைந்த அதிகாரிகள் அவசர அவசரமாக நிராகரிப்பு ஆணை பிறப்பித்துள்ளனர்.
இங்குதான் மாவட்டப் பதிவாளர் மணிகண்டனின் தில்லுமுல்லு அம்பலமாகியுள்ளது! ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டு கையேந்தியும், மனுதாரர் மறுத்துவிட்டதால் விரக்தியில் துடித்தும், மேல் அதிகாரிகளுக்குத் தங்களைக் காட்டி பதவி உயர்வை எட்டிப் பிடிக்கவும் தான் பிறப்பித்த இறுதி ஆணையின் ‘பார்வை’ பகுதியில் முதன்மை உத்தரவை மட்டும் காட்டிவிட்டு, மனுதாரர் கஷ்டப்பட்டு வாங்கி வந்து சமர்ப்பித்த அசல் திருத்த உத்தரவை (WMP8627/2026) திட்டமிட்டு மூட்டையில் மூடிவிட்டார் மணிகண்டன்! லஞ்சப் பேரத்திற்கும் சுயநல பதவி உயர்வுக்கும் முட்டுக்கட்டையாக இருந்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவையே கோப்பில் புதைத்த இந்தச் செயல் அதிகார துஷ்பிரயோகமும் நீதிமன்ற அவமதிப்பும் இல்லையா என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர்..
விதிமுறைகளை மீறி மனைப்பிரிவில் தவறு நடந்திருந்தால், முதலில் ஆவணங்களைப் பதிவு செய்த சார்பதிவாளர் விஜயன் மீது அல்லவா மாவட்டப் பதிவாளர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்? ஆனால் அதைச் செய்யும் தைரியம் மணிகண்டனுக்கு இல்லை ஏனென்றால் விஜயனை தண்டித்தால் தன் கூட்டுக் குற்றமும் வெளிப்பட்டுவிடும் என்று நன்றாகவே தெரியும்! அதனால்தான் விஜயனை மட்டும் பத்திரமாக கரந்தட்டாங்குடி அலுவலகத்திற்குத் தப்பிக்க விட்டுவிட்டு, தன் அலுவலகத்து ஊழியர் தாராவை லஞ்சத்திற்கான தூதுவராக முன்னிறுத்தி, மூவரும் சேர்ந்து லஞ்சப் பேரத்திற்காகவும் பதவி உயர்வு கணக்குகளுக்காகவும் கோப்புகளை முடக்கி உட்கார்ந்தனர் இந்த மூவர் கூட்டுச் சதி இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
மேலும், நிலம் வாங்கிய நபர்களை இடைத்தரகர்கள் மூலம் தொடர்பு கொண்ட மாவட்டப் பதிவாளர் மணிகண்டன், “அங்கு மின் இணைப்பு கிடைக்காது, பத்திரம் செல்லாது… உடனே பத்திரத்தை ரத்து செய்யுங்கள்” என மிரட்டியுள்ளார். அதாவது லஞ்சம் வாங்க முடியாத கோபத்தை நிரபராதியான நிலம் வாங்கியவர்கள் மீது காட்டிய கோழைத்தனம் இது! இதனால் பயந்துபோன வாங்குபவர்கள், தங்களது பணத்தைத் திரும்பக் கேட்டு ஷாஜாத்தி பேகத்திற்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
நான்கு மாவட்டங்களின் பொறுப்பை கையில் வைத்துக்கொண்டு அரசு நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் மணிகண்டன் லஞ்சப் பணம் மட்டும் போதாமல், நேரடியாக பிளாட்டுகளையே மிரட்டி பறித்து, தன் உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் எழுதி வாங்கி சுகபோக வாழ்க்கை வாழ்கிறார் என்று பதிவுத்துறை வட்டாரங்களிலேயே பரபரப்பாகப் பேசப்படுகிறது. அரசு சம்பளம் வாங்கிக்கொண்டு அரசையே ஏமாற்றும் இந்த மாவட்ட பதிவாளர் மணிகண்டனுக்கு இனியாவது விஜிலன்ஸ் கண் திறக்குமா?
தற்போது பாதிக்கப்பட்ட ஷாஜாத்தி பேகம் தரப்பில் முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மற்றும் பதிவுத்துறைத் தலைவர் (IG) உள்ளிட்ட 11 உயர் அதிகாரிகளுக்கு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆதாரங்களுடன் புகார் அனுப்பப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், லஞ்ச ஒழிப்புத்துறையின் கண்ணிலேயே மண்ணைத் தூவி, கோடிக்கணக்கில் சொத்து குவித்த மாவட்டப் பதிவாளர் மணிகண்டன், சார்பதிவாளர் விஜயன், பெண் ஊழியர் தாரா — இந்த மூவரும் இப்போது விஜிலன்ஸ் விசாரணை வலையில் சிக்கியுள்ளனர். இனியாவது நடவடிக்கை வருமா — இல்லை வழக்கம்போல் கோப்பு மட்டும் திறந்து மூடுவார்களா என்று பொதுமக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்!
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்க மாவட்ட பதிவாளர் மணிகண்டனை தொடர்பு கொண்டோம் — அவரோ நம் அழைப்பையே ஏற்கவில்லை. ஒருவேளை தொலைபேசி எடுக்க கையில் நேரமில்லாமல் பிளாட் எழுதி வாங்குவதில் மும்முரமாக இருப்பாரோ என்னவோ! அவர் விளக்கம் அளிக்க விரும்பினால் வெளியிட தயாராக இருக்கிறோம்.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை வருமா — பொறுத்திருந்து பார்ப்போம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version