வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்களால் கடந்த 2024ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றத்தின் முதல் சர்வதேச மாநாடு அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

வெளிநாட்டில் வாழும் தமிழக மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் அக்கறை கொண்டு மறைந்த தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள், ‘அயலக தமிழர் நல வாரியம் உருவாக்கப்படும்’ என கடந்த 2011ஆம் ஆண்டு அறிவித்தார். அதற்கான செயல்திட்டங்கள் தீட்டப்பட்ட நிலையில், அதற்கு பின்பு வந்த அதிமுக ஆட்சியின் போது அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர், பத்தாண்டுகள் கழித்து மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவியேற்ற பிறகு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ் அயலக தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் அயலக தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் கடந்த ஆண்டு இணைந்து உருவாக்கிய சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றம் தற்போது 28 நாடுகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு செயல்பட்டு வருகிறது. அப்படி வெளிநாடுகளில் வசிக்கும் பொறியாளர்களில் பலர் சரக்குப் போக்குவரத்து, சுற்றுலா, ரியல் எஸ்டேட், தொழிற்சாலைகள் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதோடு வெற்றிகரமான தொழில் முனைவோர்களாகவும் சிறந்து விளங்கி வருகிறார்கள்.
ஆகவே, அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து தமிழ்நாட்டில் வாழும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான வேலைவாய்ப்பு வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் திட்டம் தீட்டப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக இளைஞர்களுக்கு பயிற்சியுடன் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அயலக தமிழர் நலத்துறையின் முன்னாள் ஆணையரும், சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றத்தின் தலைமை ஆலோசகருமான பி. கிருஷ்ணமூர்த்தி மற்றும் ‘டான்செம்’ அமைப்பின் கீழ் செயல்படும் உலகளாவிய பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் தலைமை நிர்வாக அலுவலர் லி. ஷாநவாஷ்கான் உள்ளிட்ட பலர் துபாய், குவைத், கத்தார், சவுதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகளுக்குச் சென்று அங்குள்ள சர்வதேச தமிழ் பொறியாளர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு தாயகம் திரும்பினார்கள்.
அதன் தொடர்ச்சியாக, அடுத்தமாதம் (செப்டம்பர்) 12, 13 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் சர்வதேச அளவிலான அயலக பொறியாளர்கள் மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. இது குறித்து, சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றத்தின் தலைமை ஆலோசகர் பி.கிருஷ்ணமூர்த்தி கூறுயதாவது, “எங்களின் வெளிநாட்டு பயணத்தின் போது, அயலக தமிழர்கள் மீது இதுவரை யாரும் அக்கறை செலுத்தாமல் இருந்த போது அயலக தமிழர் நலத்துறை மூலம் அயலகத்தில் வாழும் தமிழர்களுக்கு மருத்துவ காப்பீடு, அவர்கள் குடும்பத்தினர் கல்வி கற்க சலுகை, ‘வேர்களைத் தேடி’ என்கிற திட்டத்தின் மூலம் பல தலைமுறைகளாக தமிழகத்தின் தொடர்பு இல்லாமல் இருப்பவர்களை அடையாளப்படுத்தி அவர்களை தமிழக அரசின் செலவில் தமிழகம் அழைத்து வந்து முழுமையாக தமிழக கலாச்சாரம், தமிழக வளர்ச்சியல் தொடர்பாக சுற்றுலா அழைத்து சென்று அவர்கள் அந்நாட்டில் நமது கலாச்சார தூதுவர்கள் என் நியமித்த திட்டங்களால் அவர்கள் மிகவும் பயனடைந்துள்ளதாகவும், அயலகத்தில் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு சட்ட ரீதியாக உதவிகளை மேற்கொள்ள சட்ட வல்லுனர்களை நியமித்தது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவித்தனர். அவர்களோடு சேர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கல்வி முதல் பட்டம் பெற்ற சுமார் 7 ஆயிரம் இளைஞர் மற்றும் பெண்களுக்கு வெளிநாடுகளில் உள்ள அவர்கள் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் பெற்றுத்தரவும் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
எங்களது அந்த பயணத்தின் போது, மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் குறிப்பாக என்ஐடி, ஐஐடி ஆகியவற்றில் சேர்ந்து படிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 5 சதவீதம் கூடுதல் இடங்களை ஏற்படுத்தி, 40 சதவீதம் குறைந்த கட்டணத்தில் படிக்க வழிவகை செய்துள்ளது போல, வெளிநாடு மாணாக்கர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேருவதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என்று சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றத்தின் தலைமை பொறுப்பாளர் செல்வம் மற்றும் கத்தார் வாழ் தமிழ்ச்சங்கத்தினர் கோரிக்கையும் விடுத்தனர். அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்தி அதை நடைமுறை படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் உலகலாவிய தமிழ் பொறியாளர்கள் மாநாடு ஒன்றை சென்னையில் உள்ள வர்த்தக மைத்தில் நடத்தவிருக்கிறோம்.
அதில், பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைத்து தங்களைப் பற்றி காட்சிப் படுத்த உள்ளதோடு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை குறித்து ஆலோசனைகளை வழங்கவும் உள்ளனர். மேலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்பெருமக்களும் அதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ர உள்ளனர். எனவே, இந்த அரிய வாய்ப்பை தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களும், தொழில் முனைவோர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்” என்றார்.