புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கேகே பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் தான் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இரண்டு ஆழ்துளை கிணறு மோட்டார்களும் பழுதாகி இருந்ததாகவும் இதை சரி செய்ய அதிகாரிகளிடம் கூறியதற்கு உரிய தொகை அரசு வழங்கவில்லை எனவும் அதிகாரிகள் அலட்சியமாக கூறியதாக கூறப்படுகிறது.
இருந்த போதும் ஒரு ஆழ்துளை கிணறு மோட்டாரை வைத்து இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும் நீர் ஏற்றி வந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக அந்த ஆழ்துளை கிணறு மோட்டார் பழுதாகிய நிலையில் அதை சரி செய்யப்படாமல் இருந்து வருவதாகவும் இதனால் தண்ணீர் இன்றி கிராம மக்கள் அவதி அடைவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் பள்ளி குழந்தைகளை வைத்துக்கொண்டு குடிநீர் இல்லாமல் மிகவும் அவதி அடைந்து வருவதாகவும் தங்கள் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய இரண்டு கிலோமீட்டருக்கு மேலாக நடந்து செல்லும் சூழலும் இருந்து வருவதாகவும் இது குறித்து அதிகாரிகளிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டால் நாங்கள் என்ன செய்வது? எனவும் அலட்சியமாக பதில் கூறுவதாக கூலி ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் உடனடியாக பழுதாகி உள்ள ஆழ்துளை கிணறு மோட்டார்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பழுதாகி உள்ள ஆழ்துளை கிணறு குழாய்க்கு அந்த கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாலை அணிவித்து ஊதுபத்தி காட்டி கண்ணீர் அஞ்சலி செலுத்தி தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.
மேலும் உடனடியாக தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர்.பழனிவேல்