மதுரை, மேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம் (17.01.2025) அன்று மாலை 5 மணி அளவில் மேலூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் டங்ஸ்டன் திட்டத்தின் ஆபத்து குறித்தும், அதை தடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் உரையாற்றினார்கள். இந்த பொதுக்கூட்டத்திற்கு, தோழர். P. சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மேலும், தோழர். பா.காளிதாஸ், தோழர். P. முத்துவேல், தோழர். M.S. முருகன், தோழர். P.ராஜலெட்சுமி, தோழர். K. நாகஜோதி, தோழர். மதிவாணன், தோழர். K. சேது ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்த பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவரும், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்பி-யுமான, தோழர். கே.சுப்பராயன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அதில், “மேலூர் கடந்த சில மாதங்களாக கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்த்து போராடும் போது, அதன் வேரை அறிய வேண்டும். இங்கு டங்ஸ்டன் எடுக்க வந்திருப்பது ஒரு பன்னாட்டு பகாசூர நிறுவனம். இது போன்ற நிறுவனங்கள் நமது மூல வளத்தை கொள்ளை அடித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியர்களாகிய நாம் விழித்துக் கொண்டே உறங்கிக் கொண்டிருக்கிறோம். இது முற்றிலுமான தேச விரோதச் செயல். இதை நாம் ஒன்றாக இணைந்து தடுக்க வேண்டும். அதற்கு முதலில் பிரச்சனையின் மூலத்தை புரிந்து கொள்ளுங்கள். மக்கள் இங்கே நடக்கும் அரசியலே அறிவது அவசியம். நாங்கள் இங்கே லாவடிக் கச்சேரி அடிக்க மேடை போடவில்லை. மலிவான அரசியல் செய்ய மேடை போடவில்லை. மக்கள் பிரச்சனைக்காக மேடை போட்டிருக்கிறோம். என்றும் மக்கள் பக்கம் நிற்கிறோம், நிற்போம். இந்த விவகாரம் குறித்து வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரிலே தமிழகத்தின் அனைத்து எம்பிக்களும் குரலெழுப்புவோம். மக்களும் தொடர்ந்து போராடுங்கள்” என்றார்.
வ. வரதராஜன்,
மேலூர் வட்ட செய்தியாளர்.