மதுரை, மேலூரில் ஏற்கனவே இருந்த பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிதாக பேருந்து நிலையம் கட்டும் பணி, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த கால இடைவெளியில் மேலூரில் கடும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன. அதற்கு மாற்றாக, அழகர்கோவில் சாலையில் செயல்பட்டு வந்த தற்காலிக புதிய பேருந்து நிலையமும், மக்களின் மனக்குமுறலுக்கு மத்தியில் தான் இயங்கி வந்தது. இதனால், பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைவரும் பெரும் அவதி அடைந்தனர். இந்நிலையில் எப்போது புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகவும், கேள்வியாகவும் இருந்தது. பேருந்து நிலையத்தின் இதர பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று (12.01.2025) மேலூர் கர்னல் பென்னிகுவிக் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. பண்டிகை காலத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால், மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
வ. வரதராஜன்,
மேலூர் வட்ட செய்தியாளர்.