இந்திய ஒன்றிய அரசின் நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை, கடந்த நவம்பர் மாதம் மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள அரிட்டாபட்டி பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதி மக்கள் இத்திட்டத்திற்கு எதிராக போராடி வந்தனர். இந்த நிலையில் போராடிய மக்களின் சார்பாக ஒரு குழுவினர் டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி அவர்களை நேற்று சந்தித்து பேசினர். அப்போது இத்திட்டம் தொடர்பான ஆபத்துக்களையும், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதையும் விளக்கினர். இந்நிலையில், இன்று டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களின் தொடர் போராட்டம் வென்றுள்ளதாகவும், மக்களின் குரலுக்கு செவி சாய்த்த ஒன்றிய அரசுக்கு தங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
வ.வரதராஜன்,
மேலூர் செய்தியாளர்.