தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு திருப்பணிகளில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடுகள் நடப்பதாக பாபாஜி ராஜ பான்ஸ்லே மீது பகீர் புகார் கிளம்பியுள்ளது.
தஞ்சாவூரின் அடையாளங்களில் முக்கியமானது புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில். தஞ்சை நகரின் கிழக்கு திசையில் உள்ள காவல் தெய்வமாக சோழர்களால் இந்த அம்மன் வழிபடப்பட்டுள்ளார். இக்கோயிலுக்கு மராட்டிய மன்னர்களும் நிறைய திருப்பணிகள் செய்துள்ளனர். புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநில பக்தர்களும் தினந்தோறும் குவிகின்றனர். வேண்டிய வரங்கள் எல்லாம் வேண்டியபடி கிடைக்கும் என்ற நம்பிக்கையால் பக்தர்களின் உணர்வுப்பூர்வமான கோயிலாக புன்னை நல்லூர் உள்ளது. அந்தக் கோயிலின் குடமுழுக்கு வரும் பிப்ரவரி 10ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்காக கோயில் திருப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்த சூழலில்தான் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் திருப்பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பக்தர்கள் குமுறுகின்றனர். இதில் அரண்மனை தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலராக இருக்கும் பாபாஜி ராஜா பான்ஸ்லே மீது மிகப்பெரிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு பணிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் பக்தர்களிடம் நன்கொடை பெற்றுள்ளதாகவும், பின்னர் அதே பணிகளுக்கு அறநிலையத்துறையிடமும் பணம் கேட்டு அழுத்தம் கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரே திருப்பணிக்கு எதற்கு இரண்டு நிதியா என்று கொந்தளிக்கிறார்கள் பக்தர்கள். அதேபோல நன்கொடையாளர்களிடம் கூடுதலாக பணத்தை வாங்கிக்கொண்டு, தரமற்ற குறைவான விலையில் கிடைக்கும் பொருட்களை வைத்து பணிகளை செய்வதாகவும் பான்ஸ்லே மீது குற்றம்சாட்டப்படுகிறது.

இதுபற்றி பேசிய நன்கொடையாளர் ஒருவர், “நாங்கள் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலின் மிகத் தீவிரமான பக்தர்கள். இங்கே வேண்டுதல் வைத்தால் அம்மா உடனே நிறைவேற்றித் தருவாள். எனவே இக்கோயிலுக்கு எங்களால் இயன்ற நன்கொடையை வழங்கினோம். ஆனால் அதன்பின்னர் கோயில் வட்டாரத்தில் விசாரித்தபோது அதிர்ச்சியடைந்தோம். எங்களிடம் ஒரு திருப்பணிக்காக பணத்தை வாங்கிக்கொண்டு, மீண்டும் அதே திருப்பணிக்காக அரசிடம் பணம் வாங்க பான்ஸ்லே அழுத்தம் கொடுப்பதாக கேள்விப்பட்டோம். இதனால் கடும் மன உளைச்சலில் உள்ளேன். என்னைப் போன்ற பலரிடமும் இதேபோல நன்கொடை பெற்றுக்கொண்டு அதே பணிக்கு அரசிடமும் பணம் வாங்க முயற்சிக்கிறார் அவர். ‘அம்மனுக்கு செய்கிறோம், எங்கள் பெயரெல்லாம் உபயம் என போடத் தேவையில்லை’ என அனைத்து பக்தர்களும் சொல்லிவிடுகிறார்கள். இதையே சாக்காக வைத்து பான்ஸ்லே முறைகேடுகளை செய்கிறார். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்த விஷயம் அறிந்து நாமும் விசாரணையில் இறங்கினோம். அதில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை. அவர்கள் சொன்னதை தொகுத்துள்ளோம். “ இந்த முறைகேடு தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கின்போதே தொடங்கியது. அப்போதே நன்கொடையாளர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்று பல்வேறு திருப்பணிகளை முடித்துவிட்டு, மீண்டும் அரசிடம் அந்த திருப்பணிக்காக நிதியை பெற்றார் பான்ஸ்லே. அந்த நேரத்தில் தமிழில் குடமுழுக்கு என ‘போகஸ்’ முழுக்க அதன்மீதே இருந்ததால், இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரவில்லை. அதேபோல ருசிகண்ட பூனையாக இப்போது புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலிலும் புகுந்துள்ளார். இப்போது மாரியம்மன் கோயிலில் ரூ.2 கோடி அளவுக்கு நன்கொடை பணத்தை கணக்குகாட்டி, மீண்டும் அரசிடம் பணம் வாங்க முதல்கட்டமாக முயற்சிக்கிறார்.
அதுபோல மாரியம்மன் கோயிலில் பல்வேறு பணிகளுக்கு தரம் குறைந்த பொருட்களை வாங்கி முறைகேடுகள் நடக்கிறது. முக்கியமாக எலக்ட்ரிகல் பணிகளுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக எஸ்டிமேட் போட்டு பணிகள் நடக்கிறது. ஆனால் நீங்களே சென்று பாருங்கள் எவ்வளவு தரம் குறைந்த பொருட்களை போட்டுள்ளார் என்பது தெரியும். புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் முக்கிய திருவிழா நாட்களில் இலட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள். இதுபோன்ற தரம் குறைந்த எலக்ட்ரிகல் பொருட்களை போட்டு வேலைசெய்தால், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் என்ன ஆவது. எனவே தமிழக அரசு, தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கில் கிடைத்த நன்கொடை எவ்வளவு, அரசு செலவு செய்தது என்பது என்பன போன்ற வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அதேபோல புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் திருப்பணிக்கு நன்கொடையாக கிடைத்த தொகை எவ்வளவு, அரசு செய்த செலவு எவ்வளவு என்பன போன்ற விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அப்போதே உண்மை தெரியவரும். இல்லையென்றால், பான்ஸ்லே செய்யும் தவறுகளுக்கெல்லாம், அரசே பொறுப்பேற்கும் நிலை வரும். அதேபோல நன்கொடையாளர்களும் அவரிடம் நிதி கொடுத்து ஏமாற வேண்டாம்” என்றார் ஆதங்கத்துடன்.

அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் 88 கோயில்கள் உள்ளன. அதற்கெல்லாம் பாபாஜி ராஜா பான்ஸ்லே தான் பரம்பரை அறங்காவலர். இந்த கோயில்களின் திருப்பணிகளின் போதெல்லாம் இதேபோன்ற ‘வசூல் வேட்டையே’ நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. என்னதான் கோயில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாடு என சொன்னாலும், இந்த 88 கோயில்களுக்கும் ‘அறிவிக்கப்படாத ராஜா’ பான்ஸ்லேதான். ஒவ்வொரு கோயிலிலும் அர்ச்சகர்கள், பணியாளர்களை நியமிப்பது, நீக்குவது எல்லாம் அவர்தான். இதிலேயே ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் அவர் முறைகேடுகள் செய்வதாக சொல்லப்படுகிறது. மேலும், ஒவ்வொரு கோயிலிலும் ஒரு அர்ச்சகரை பொறுப்பாளராக போட்டுள்ளார் பான்ஸ்லே. அவர் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இவருக்கு ‘மாமூலாக’ கப்பம் கட்ட வேண்டும். இல்லையென்றால் அந்த அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுப்பார். அதுபோல கோயில்களில் பிரசாதகடை, பூக்கடை, அர்ச்சனை சாமான் கடை, கழிவறை, செருப்பு டோக்கன் கடை வரை மாமூல் பான்ஸ்லேவுக்கு மாதந்தோறும் செல்வதாக குமுறுகின்றனர் கடைக்காரர்கள். மேலும், இவருக்கு வேண்டப்பட்டவர்கள் கோயிலுக்குச் சென்றார், மிகவும் விலை உயர்ந்த சால்வை, பட்டாபிஷேகம், மரியாதை, பிரசாதம் என ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் அர்ச்சகர்களும் கதறுகின்றனர்.
புன்னை நல்லூர் மாரியம்மனே டெல்டா பகுதியின் 90சதவீத குடும்பங்களுக்கும் குலதெய்வம் போல இருக்கிறது. அந்த கோயில் குடமுழுக்கு திருப்பணிகளில் முறைகேடு என்ற செய்தி பக்தர்களையும், நன்கொடையாளர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதுபற்றி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பான்ஸ்லே கோயில் பணத்தையும், பக்தர்களின் பணத்தையும் சுருட்டும் போக்கு இனியும் தொடர்ந்தால் அவருக்கு எதிரான போராட்டங்கள் டெல்டா முழுக்க வெடிக்கும் என்றும் ஆன்மீக அமைப்புகளும், இயக்கங்களும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார் ‘ யாரு தப்பு செஞ்சாலும் மகமாயி கூலி கொடுப்பாள்’ என்று. ஆனால் அப்படிப்பட்ட மாரியம்மன் மகமாயி கோயிலிலேயே நடக்கும் முறைகேடுகளுக்கும் அவளே கூலி கொடுப்பாள் என்று சொல்கிறார்கள் பக்தர்கள். அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்ப்போம்.