திருச்சி மாவட்டம் துறையூர் நகருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் துறையூர் முசிறி பிரிவு ரோடு சாலை அருகே உள்ள தங்க நகர் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாக சாலையில் ஓடுகிறது.
இவ்வாறு வீணாகும் குடிநீர் தங்க நகர் குடியிருப்பு வீதிகளில் ஓடுவதால் அப்பகுதியில் சாலை சேரும் சகதியுமாக காணப்படுகிறது.
அதில் தேங்கி நிற்கும் தண்ணீரில் பன்றிகள் மேய்வதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் நடக்க கூட முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி குடியிருப்பு வீதிகளில் ஓடுவதால் இதுவரை மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் உடைப்பை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….