அ.தி.மு.க.வின் மாஜிக்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் குறி வைத்து தூக்கி வருகின்றனர். தி.மு.க. ஆட்சி அமைந்து 3 வருடங்கள் கழித்த பிறகு இந்த நடவடிக்கை பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துவருவதுதான் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது எஸ்பி வேலுமணி முறைகேட்டில் ஈடுபட்டதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போது ஓபிஎஸ் அணியின் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வருபவருமான வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அவரது 2 மகன்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
2011 – 2016 அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அப்போது பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்க அவர் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
அதில் ரூ.26.90 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டப்பட்டிருந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில்தான் அடுத்ததாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ‘மணி’யானவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள். காரணம், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ‘மாஜி’க்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைதான் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
சமீபத்தில்தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கிறது. பழனிமாணிக்கமே எதிர்பார்க்க அளவில் தி.மு.க. தலைமை அவரை கௌரவித்திருக்கிறது. காரணம், வருகிற சட்டமன்றத் தேர்தலில் டெல்டாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெல்ல வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறாராம்.
அதனால்தான், டெல்டாவில் ஓரளவு செல்வாக்காக இருக்கும் வைத்திலிங்கம் குறி வைத்து தூக்கப்பட்டிருக்கிறார். இவர் கைதானலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள். ஏனென்றால் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அந்தளவிற்கு ஆதாரங்கள் இருக்கிறதாம். ஏற்கனவே டெல்டாவில் முக்குலத்தோர் வாக்குகளை இழந்து அ.தி.மு.க. பலவீனப்பட்டிருக்கும் நிலையில், பழனி மாணிக்கம் மீண்டும் லைம் லைட்டில் வந்திருப்பது தி.மு.க.விற்கு பலமாக பார்க்கப்படுகிறது.
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என தலைமை குறி வைத்து காய் நகர்த்துவது குறிப்பிடத்தக்கது.