சிப்காட் திட்டத்தால் 25க்கும் மேற்பட்ட வழிப்பாட்டுத் தளங்கள், காலங்காலமாக நடைபெற்று வரும் பண்பாட்டு விழாக்கள், 500 ஏக்கர் விவசாய நிலம், 200 ஏக்கர் மேய்ச்சல் நிலம், 20 நீர்நிலைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனவும், அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகும் என்று மக்கள் அச்சம். திட்டத்தை உடனே கைவிடக்கோரி 18 கிராம மக்கள் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வஞ்சிநகரம், பூதமங்கலம், கொடுக்கம்பட்டி ஊராட்சிகள இணையுமிடத்தில் உள்ளது கல்லாங்காடு பகுதி. இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிப்காட் தொழிற்கூடம், சுமார் 420 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சகம் சார்பாக அறிவிக்கப்பட்டு, அதற்கான அளவீடு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. சிப்காட் திட்டம் குறித்து விவாதித்து முடிவு செய்வதற்காக கல்லங்காடு பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள், இன்று அழகுநாச்சி அம்மன் கோவில் முன்பாக கூடிப் பேசினர்.
கூட்டத்தில் பேசிய மக்கள், கல்லங்காடு பகுதியில் உள்ள
நாகப்பன் சிவன்பட்டி, மூவன் செவல்பட்டி, கம்பாளிபட்டி, நெல்குண்டுப்பட்டி, உசிலம்பட்டி, தாயம்பட்டி, கண்டுவபட்டி , ஒத்தப்பட்டி, முத்துப்பட்டி, நாட்டார்மங்கலம், நல்ல சுக்காம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கல்லங்காட்டை, ஆடு மாடு மேய்ச்சலுக்காக பயன்படுத்தி வருவதால் இப்பகுதியில் சிப்காட் அமைக்கப்பட்டால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்தனர்.
மேலும், சிப்காட் அமைக்கப்படுவதால் கல்லங்காடு பகுதியில் பெய்யும் மழை நீரானது, சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள அதிகாரக் கண்மாய்,
கிராந்த கண்மாய், வேம்புலி கண்மாய், சுந்தரம் கண்மாய், துவரங்குண்டு, பொன்னுச்சிகுளம், பிராந்தன் கண்மாய், கம்பாளிக் கண்மாய் உள்ளிடவற்றிக்கு செல்லும் நீர்ப்போக்கு முற்றிலும் பாதிக்கப்படுவதோடு, கடலை, நெல், தென்னை, பருத்தி, காய்கறிகள் பயிறு வகைகள் உள்ளிட்ட விவசாயமும் முற்றிலும் நாசமாக வாய்ப்புள்ளதையும் சுட்டிக்காட்டிப் பேசினர்.
கல்லங்காடு சுற்றுப்பகுதிகளில் நாகப்பன் சிவல்பட்டி, மூவன் சிவல்பட்டி, ஒத்தப்பட்டி, கண்டுவபட்டி, தாயம்பட்டி, நல்ல சுக்காம்பட்டி, கீழ நாட்டார்மங்கலம், மேல நாட்டார்மங்கலம், நெல்லுக்குண்டுபட்டி, கம்பாளிபட்டி, வஞ்சிநகரம், உசிலம்பட்டி, முத்துப்பட்டி உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வழிபாட்டில், கல்லங்காட்டில் உள்ள சிவன் கோயில் மற்றும் அழகுநாச்சியம்மன் கோயில்கள் முக்கிய பங்குவகிப்பதால் சிப்காட் அமைக்கப்பட்டால் வழிப்பாட்டு தளங்களும், பண்பாட்டு விழாக்களும், காடுகளும் சிதையும் சூழல் உள்ள கவலைகளையும் பேசிய மக்கள் வெளிப்படுத்தினர்.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் வஞ்சி நகரம், பூதமங்கலம், கொடுக்கம்பட்டி ஊராட்சிகளில் உள்ள இடங்களை இணைத்து, கல்லங்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் அமைக்கப்படும் சிப்காட் திட்டத்தால் இப்பகுதியில் உள்ள கோவில்கள், கோயில் காடுகள், விவசாய நிலங்கள், நீராதாரங்கள், மேய்ச்சல் நிலங்கள், பழங்கற்கால சின்னங்கள், கல்வெட்டுகள் பாதிக்கும் என்பதால் இத்திட்டத்தை உடனே கை விடுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும்;
இக்கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவும், இப்பகுதியை பாதுகாப்பதற்காக கல்லங்காடு சுற்றுவட்டாரப் பகுதி பாதுகாப்பிற்கான 18 கிராம மக்கள் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதையும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வ.வரதராஜன்,
மேலூர் செய்தியாளர்.