தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா.அண்ணாதுரை, இவர் கட்சிக்காரர்களிடம் இணக்கமாக இல்லை, யாரை மதிக்க மறுக்கிறார்கள் என்கிற பல புகாரில் அண்மையில் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், மாவட்டச் செயலாளர்கள் போட்டியில் இருந்த பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் மாளியக்காடு ரமேஷ், பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றியம் பார்த்திபன், என பலரையும் மீறி ஆ.ராசா, டி.ஆர்.பி ராஜா ஆகியோரைப் பிடித்து பட்டுக்கோட்டை முன்னாள் ஒன்றிய சேர்மன் பழனிவேல் மாவட்டப் பொறுப்பாளர் பதவியை கைப்பற்றினார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அண்மையில் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சிக்காக பாடுபடுவதாக தனது பிள்ளைகள் மீது சத்தியம் செய்தவர், தற்போது கட்சியை வளர்ப்பதை விட்டு கல்லா கட்டுவதில் குறியாக இருக்கிறார். என்ற குற்றச்சாட்டை உடன்பிறப்புகள் தற்போது எழுப்பி இருக்கின்றனர். கடந்த 15 ஆம் தேதி சனிக்கிழமை பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்தபோது, அதே தினத்தில் திருச்சிற்றம்பலத்தில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி கலந்து கொண்ட போதும், இவர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், பேராவூரணி பயணியர் மாளிகையில் மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல், ஒன்றியச் செயலாளர்களை அழைத்து ரகசிய கூட்டம் போட்டுள்ளார். அந்த கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் என பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளையும் வரவழைத்துள்ளார்.

இரண்டு தொகுதிகளிலும் நடைபெறும் அரசுப் பணிகளை தனக்கு பட்டியலாக தர வேண்டும். அதில் ஒப்பந்ததாரர்களிடம் கமிஷனை வாங்கி நேரடியாக என்னிடம் தந்து விட வேண்டும். நான் ஒன்றிய செயலாளர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுவேன் என்று அதிகாரிகளிடம் கூறியதாக தெரிகிறது. ரகசிய கூட்டத் தகவல் தெரிந்த எம்பி, எம்எல்ஏக்கள், இதனால் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. கட்சியை வளர்ப்பதாக கூறியவர் அதிகாரிகளை அழைத்து கமிஷன் கேட்ட சம்பவம் பேராவூரணி, பட்டுக்கோட்டை திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய பெருந்தலைவர்கள் இல்லாததால் அங்கு நடைபெறும் பணிகளில் கமிஷனை கேட்டு பெறுவதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது கமிஷன் வருவதால் ஒன்றிய செயலாளர்களும் மாவட்ட பொறுப்பாளருக்கு ஆதரவாக செயல்பட தொடங்கியுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் திமுக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே மாவட்ட பொறுப்பாளரையும் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய செயலாளர்களையும் மாற்றினால் மட்டுமே வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தவாறு 200க்கும் அதிகமான சீட்டுகளை பிடிக்க முடியும் என்று பொதுமக்கள், கட்சி அபிமானிகள் தெரிவிக்கின்றனர்.