கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி மற்றும் நகராட்சியை விரிவுபடுத்துதல், பேரூராட்சியை தரம் உயா்த்துதல் தொடா்பாக கருத்து கேட்புக் கூட்டம் பிப். – 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு (ஜன.27) வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சி, நகராட்சியுடன் சோ்த்தல், பேரூராட்சியாக தரம் உயா்த்துதல் தொடா்பாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒசூா் மாநகராட்சியுடன் பேகேப்பள்ளி, நல்லூா், ஒன்னல்வாடி, கொத்தகொண்டப்பள்ளி, சூளகிரி ஒன்றியத்துக்கு உள்பட்ட பேரண்டப்பள்ளி ஊராட்சிகளுக்கு உள்பட்ட குக்கிராமங்கள் முழுமையாக இணைக்கப்படுகின்றன. சென்னசந்திரம் ஊராட்சியில் விஸ்வநாதபுரம், தொரப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சிக்கு உள்பட்ட குமுதேப்பள்ளி, காந்திநகா், எல்லம்மா கொத்தூா் உள்ளிட்ட கிராமங்கள், ஒசூா் மாநகராட்சியுடன் இணைக்கப்படுகின்றன. மேலும், கிருஷ்ணகிரி நகராட்சியுடன் கட்டிக்கானப்பள்ளி ஊராட்சிக்கு(முழுமையாக) உள்பட்ட 31 குக்கிராமங்கள் இணைக்கப்படுகின்றன. சூளகிரி , ராயக்கோட்டை ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயா்த்தப்படுகின்றன. இதில், சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட 11 குக்கிராமங்கள் சூளகிரியில் பேரூராட்சியிலும், ராயக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட 12 குக்கிராமங்கள் ராயக்கோட்டை பேரூராட்சியிலும் இணைக்கப்படுகின்றன. இதேபோல பாகலூா் ஊராட்சி, பேரூராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு, இதில் ஒசூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாகலூா் ஊராட்சி முழுமையாகவும், பெலத்தூா் ஊராட்சியில் சூடாபுரம் கிராமம் மட்டும் இணைக்கப்படுகின்றன. மேலும், உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சி, நகராட்சியுடன் சோ்த்தல் மற்றும் பேரூராட்சியாக தரம் உயா்த்துதல் தொடா்பாக ஆட்சியா் தலைமையில் எம்.பி., எம்எல்ஏக்கள், தோ்வு செய்யப்பட்ட தலைவா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்டச் செயலாளா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா், குடியிருப்போா் நலச் சங்க பிரதிநிதிகளின் கருத்துகள் கேட்பதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் பிப். 4-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளாா்.
ஜிபி மார்க்ஸ்
செய்தியாளர் ஓசூர்