மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள அரிட்டாபட்டி, அ. வல்லாளபட்டி கிராமங்களை உள்ளடக்கி டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பு வெளியானதை எதிர்த்து, கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் அந்த ஊர்களுக்கு சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விட்டனர். பல்வேறு சமூக ஆர்வலர்களும், போராட்ட குழுவினரோடு இணைந்து இந்த திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஜனவரி 9 ஆம் தேதி அ.வல்லாளபட்டியில் போராடும் மக்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த திட்டம் ஒருபோதும் இங்கு நடைமுறைப்படுத்தப்படாது எனவும், போராட்டக்காரர்கள் மத்திய சுரங்கத் துறை அமைச்சரை நேரில் சந்திக்க விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றும், அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி தடை உத்தரவு பெற்று தரப் போவதாகவும் உறுதி அளித்தார்.
இந்நிலையில் இன்று (21.01.2025) அப்பகுதியைச் சார்ந்த சிலரை தமிழக பாஜக சார்பில் டெல்லி அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையிலான குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர்களாக பாஜகவின் மகா சுசீந்திரன், பேரா. ராம ஸ்ரீனிவாசன்,
ராஜசிம்மன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் உள்ளனர். போராடுகிற மக்கள் சார்பில் மகாமணி அம்பலகாரர், ஆனந்த், போஸ், முருகேசன்,முத்துவீரணன், சாமிக்கண்ணு, நரசிங்கம்பட்டி ஆனந்த் ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் நாளை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி அவர்களை சந்திக்க உள்ளனர். இந்நிலையில் சென்னையில் மாலை செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “நாளை அரிட்டாபட்டி பகுதி மக்களுக்கு நல்ல செய்தி வரும்” என்றார்.
இதற்கு மத்தியில் பாஜக சார்பில் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டுள்ளவர்களில் போராட்டக்குழுவைச் சார்ந்தவர்களோ, விவசாய அமைப்பை சார்ந்தவர்களோ யாரும் இல்லை என்ற கருத்தும் எழுந்துள்ளது. ஆனால், எங்களுக்கு நல்ல முடிவை டெல்லி மேலிடம் கொடுத்தால் மகிழ்ச்சி தான். அது யார் மூலமாக கிடைத்தாலும் நாங்கள் வரவேற்போம் என்கின்றனர் அப்பகுதி மக்களும், போராட்ட குழுவினரும்.
வ.வரதராஜன்,
மேலூர் வட்ட செய்தியாளர்.