திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருக்கிறார்களே?
சமீபத்தில்தான் தெலுங்கானாவில் நடிகர் அல்லு அர்ஜூனை பார்க்க கூட்டம் அலைமோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார். இதற்காக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அதே போல் திருப்பதியில் கூட்ட நெரிசலை முறைப்படுத்தாத அதிகாரிகளை எச்சரிப்பதோடு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்திருக்கிறதே?
போட்டியிட்டால் மற்றும் வெற்றி பெற்றுவிட முடியுமா? தமிழகத்தைப் பொறுத்தளவில் பல ஆண்டுகளாக இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. காரணம், ‘திருமங்கலம் ஃபார்முலா’வை அமல்படுத்தியது அதே தி.மு.க. ஆட்சியில்தான். அப்படியிருக்கும்போது, எதற்கு தேவையில்லாமல் போட்டியிட்டுக்கொண்டு என எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்திருக்கலாம். ஆனால்,எடப்பாடியும் சரி, நடிகர் விஜய்யும் சரி களத்தில் இறங்கியிருக்க வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை!
‘யார் அந்த சார்?’ வாசகம் தமிழகத்தில் பிரபலமடைந்திருக்கிறதே?
வெட்கித் தலைகுனிய வேண்டிய விவகாரம்! பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. நீதிமன்றமே இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அரசியல் செய்கின்றன என கருத்து தெரிவித்திருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்!
‘நான் 38 ஆண்டுகளாக கண்ணகியாக வாழ்ந்து வருகிறேன்’ என்று கூறியிருக்கிறாரே நடிகை குஷ்பு?
மதுரை இன்னொருமுறை எரியுமோ..?
சட்டசபை கேமராக்கள் எதிர்க்கட்சி பக்கம் திரும்பவே இல்லை என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருக்கிறாரே?
தமிழக சட்டசபை நிகழ்வுகளை, எந்தவித ஒளிவு மறைவுமின்றி, முழுமையாக, மக்களின் குரலான எதிர்க்கட்சியின் கருத்துக்களை மக்களுக்கு நேரடி ஒளிபரப்ப வேண்டும் & அதுதான் ஜனநாயகம். ஆனால் அப்படி நடப்பதில்லை. யார் ஆள்கிறார்களோ அவர்களுக்கு சாதகமாக மக்களுக்கு வெட்டி, ஒட்டி ஒளிபரப்புகிறார்கள். இது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம்!
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறாரே?
ஆமாம். முதல்வரும், துணை முதல்வரும் வாயே திறக்கவில்லை என்ற எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தி.மு.க.வினர் பொள்ளாச்சி சம்பத்தை சொல்லவும், அ.தி.மு.க.வினர் அண்ணா பல்கலை- விவகாரத்தை சொல்வதும்தான் வேதனை.
ஓரு ஆளும் கட்சி தவறு செய்கிறது என்றுதான் அடுத்த கட்சியை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தபிறகு, ‘அந்த ஆட்சியில் அது நடந்துதே’ என்று சொல்வதை விட்டுவிட்டு, இனி இப்படியொரு சம்பவம் நடக்காமல் முதல்வர் பார்த்துக்கொள்வதோடு, குற்றவாளிக்கு விரைந்து அதிகபட்ச தண்டனை கொடுத்தால்தான், இதுபோன்ற சம்பவங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது.
‘திராவிட ஒழிப்பும்… பெரியார் எதிர்ப்பும்’ எனது கொள்கை என்கிறாரே நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்..?
ம்ம்ம்… மனைவியின் மனதில் உள்ளதைக் கூட கண்டுபிடித்துவிடலாம். ஆனால், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கொள்கைகளை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை!
தமிழகத்தை நோக்கி வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் படையெடுத்து வருகிறதே?
2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறதே… இன்னும் விசாரணை அமைப்புகளின் வேகம் தமிழகத்தை நோக்கி இருக்கும். ஆனால், நடவடிக்கைகள் இருக்குமா? என்பதுதான் கேள்விக்குறியே!
தமிழகம் பலமுறை எச்சரித்தும், தொடர்ச்சியாக கேரளாவில் இருந்து கழிவுகள் கொட்ட கொண்டுவரப்படுகிறதே?
தமிழகத்தை குப்பைத் தொட்டியாக நினைத்துவிட்டதோ கேரளம்! தமிழகத்தில் உள்ள அரசியல் புள்ளிகள் கனிமவளங்களை கேரளாவிற்கு கொண்டு செல்வதால், கேரளாவில் உள்ள கழிவுகளை தமிழகத்திற்கு கொண்டுவருகிறார்களோ..? எல்லாவற்றிற்கு காரணம் நாம்தான் என்பதை நாம் உணர்வுப் பூர்வமாக உணரும்வரை, இந்த மாதிரியான அவலங்கள் தொடரும்..!
தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாரா..?
தமிழகத்தில் ‘சிஸ்டம் சரியில்லை’ என நடிகர் ரஜினிகாந்த் சொல்லியதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. நமது வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் கொடுத்துப் பழகி விட்டார்கள்… யார் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ… அவர்களுக்கு மக்களும் வாக்களிக்க முடிவு செய்துவிட்டார்கள். இந்த நிலை மாறினால், விஜய்யால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன்..!