மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள அரிட்டாபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை உள்ளடக்கி டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு கடந்த நவம்பரில் வெளியிட்டது. இதனை அடுத்து மக்களின் தொடர் போராட்டங்கள் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பிரச்சனை என்பதால் இதனை முழுமையாக ரத்து செய்யக் கோரி, முல்லைப் பெரியாரு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் 7 ஜனவரி, 2025 அன்று நடைபெற்றது. மேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து, மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெருந்திரளாக மதுரையை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்பகுதிவாழ் மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட பலரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
முதலில் இந்தப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகமான முடிவு எட்டப்பட்டு தொடர்ந்து பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. மாலையில் மதுரை தமுக்கம் மைதானத்தை இந்த பேரணி சென்றடைந்தது. அங்கு சாலையில் அமர்ந்து மக்கள் இத்திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அது குறித்த ஆபத்துக்களையும் எடுத்துக் கூறினர். இந்த திட்டத்தை முழுமையாக கைவிடும் வரை, எங்கள் போராட்டம் ஓயாது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
வ. வரதராஜன்,
மேலூர் வட்ட செய்தியாளர்.