தமிழக சட்டசபையின் துணை சபாநாயகர் பதவிக்கு திருச்சி மாவட்டம் துறையூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ ரவிசங்கரை முதல்வர் விஜய் தேர்வு செய்துள்ளார். இதற்கான வேட்புமனுவை தமிழக சட்டசபை செயலாளரிடம் விஜய் முன்னிலையில் ரவிசங்கர் இன்று தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் போட்டியின்றி துணை சபநாயகராக ரவிசங்கர் தேர்வாகி உள்ளார். இவர் யார் என்பது பற்றி இங்குபார்க்கலாம்.
தற்காலிக சபாநாயகரான மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா தலைமையில் சட்டசபை கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா இன்று முதல்வர் விஜய் உள்பட வெற்றி பெற்றவர்கள் எம்எல்ஏக்களாக பதவியேற்று கொண்டனர்.
இதையடுத்து தவெக சார்பில் சபாநாயகர் வேட்பாளராக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் தவெக எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகராக திருச்சி மாவட்டம் துறையூர் (தனி) தொகுதியின் தவெக எம்எல்ஏ ரவிசங்கர் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் இன்று முதல்வர் விஜய் முன்னிலையில் சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் மனுத்தாக்கல் செய்தனர்.
இவர்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தும் என்று கூறப்பட்டது. குறிப்பாக திமுகவில் சட்டசபை சபாநாயகர் பதவிக்கு ஒட்டன்சத்திரம் எம்எல்ஏ சக்கரபாணி நிறுத்தப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் போட்டியிடவில்லை. வேட்புமனுக்கள் செய்வதற்கான காலஅவகாசமும் முடிந்தது. இதனால் போட்டியிடன்றி சபாநாயகராக ஜேசிடி பிரபாகரர், துணை சபாநாயகராக ரவிசங்கர் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
துணை சபாநாயகராக தேர்வாகி உள்ள ரவிசங்கர் திருச்சி மாவட்டம் துறையூர் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது தனித்தொகுதியாகும். இதனால் ரவிசங்கர் ஆதிதிராவிடர் (தலித்) சமுதாயத்தை சேர்ந்தவர்.இந்த தொகுதியில் ரவிசங்கர் மொத்தம் 66,263 வாக்குகள் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சரோஜா 56,649 வாக்குகள் பெற்றார். இதனால் ரவிசங்கர் 9,614 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் லெனின் பிரசாத் 49,222 வாக்குகள் பெற்று 3ம் இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்கிய கவுசல்யா 8,436 வாக்குகளுடன் 4ம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது….
செய்தியாளர்: ரூபன்ராஜ்

