தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் போலி உரங்கள் பதுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதனை ஒழுங்கு படுத்திய தஞ்சை மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தரக் கட்டுப்பாடு) செல்வராஜ் என்பவர் தற்போது அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளர். என்கிற தகவல் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்க, என்ன நடந்தது, ஏன் இந்த அதிகாரி செல்வராஜ் மீது நடவடிக்கை எடுத்தார்கள் என அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

வேளாண் அலுவலராக பதவியில் இருக்கும் செல்வராஜ் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு வேளாண் உதவி இயக்குனராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார். அதன்படி பல இடங்களில் உரங்கள் பதுக்கப்படுகிறது உரத்தட்டுப்பாடு ஏற்படுகிறது என்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க மாவட்ட ஆட்சியரும் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட இந்த அதிகாரி செல்வராஜ் தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் உரத் தட்டுப்பாடுகளை தடுத்து சில இடங்களுக்கு அதிரடியாக சீல் வைத்துள்ளார். கடந்த வாரம் தஞ்சை பைபாஸ் அருகே உள்ள வாண்டையார் வளாகத்தில் உள்ள ஒரு உரக்கடையை சோதனை செய்து அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கிறது என கடும் நடவடிக்கை எடுத்தார். அங்கு அவர் மட்டும் செல்லவில்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வித்யா உள்ளிட்ட அதிகாரிகளும் சென்று இருந்தனர். ஆனால் செல்வராஜ் மீது மட்டும் கோபமான அந்த கடையின் உரிமையாளர் சில முக்கிய ஆளும் கட்சி பிரமுகர்களை பிடித்து உடனடியாக இவரை மாற்றம் செய்ய வேண்டும் இவர் இருந்தால் நாங்கள் பிசினஸ் செய்ய முடியாது என அழுத்தம் கொடுத்து இவரை மாற்றி இருக்கின்றனர். மீண்டும் ஆரம்பத்தில் இருந்த அதே வேலைக்கு (A.O.) பணியமத்தப்பட்டுள்ளார். வேளாண் உதவி இயக்குனராக பொறுப்பு வகித்த செல்வராஜ் திறம்பட பணியாற்றினார் விவசாயிகளின் நண்பனாக வலம் வந்தார். முன்னாள் எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் சிறந்த பணிக்கான நற்சான்றிதழையும் பெற்றுள்ளார் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில் அவரின் மாற்றம் விவசாயிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த டெல்டாவையும் கலக்கமடைய செய்துள்ளது.

இது சம்பந்தமாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வித்யாவிடம் பேசினோம். நீங்கள் சொல்வது தவறு அவர் அவருடைய பணிக்கு சென்று இருக்கிறார். கூடுதல் பணியாகத்தான் இந்த பொறுப்பை பார்த்தார். தற்போது அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருடைய பணிக்கு சென்று இருக்கிறார் இதனை தேவை இல்லாமல் விவாதப்பொருளாக மாற்றுகிறார்கள் என்று முடித்துக் கொண்டார் வேளாண்மை இணை இயக்குனர் வித்தியா.
நெருப்பு இல்லாமல் புகையுமா.?

பின்னணியில் யார் அந்த சக்தி என்பதையும் விரைவில் ஆதாரத்துடன் வெளிப்படுத்துவோம்.
செய்தி – எம்.விஜய்.

