டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து பல கட்ட போராட்டம் நடந்த நிலையில் கடந்த 23ந்தேதி மத்திய அரசு சார்பில் மேலூர் பகுதி அம்பலகாரர்களை டெல்லிக்கு அழைத்து மேலூர் பகுதியில் உள்ள பல்லுயிர் தளம் மற்றும் பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்துசெய்வதாக அறிவித்தது. இந்த ரத்து அறிவிப்பை மேலூர் சுற்றுவட்டார மக்கள் வரவேற்றதோடு அரிட்டாபட்டி அ.வல்லாளபட்டி, நரசிங்கம்பட்டி, தெற்குத்தெரு சுற்றுவட்டார மக்கள், முல்லை பெரியாறு விவசாயிகள் சங்கத்தினர்,டங்ஸ்டன் சுரங்கத்திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்டோர் இணைந்து மேலூர் பென்னிக் குவிக் பேருந்து நிலைய வரை பேரணியாக சென்று காஞ்சிவனம் கோயிலில் வழிபாடு நடத்தி, வாழ்த்துக்களை பரிமாறி, வெடி வெடித்து இனிப்புக்களை வழங்கி மகிழ்ந்தனர்.
![](https://arasiyaltimes.com/wp-content/uploads/2025/01/IMG-20250129-WA0026-1024x463.jpg)
இந்நிலையில் கடந்த 27ந்தேதி அரிட்டாபட்டிக்கு வருகை வந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டது மக்களுக்கான வெற்றி, நமக்கான வெற்றி என்றதோடு, கிராமசபை கூட்டத்திலும், மேலூர் ஆர்ப்பாட்டத்திலும் எழுந்த எதிர்பினால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும் மக்களுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்த முனைந்தால், அதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தும் என்று கூறினார்.
இந்நிலையில் போராடிய மக்கள் தங்களின் நூற்றுக்கணக்கான
அம்மன், கருப்பர், அய்யனார் சாமிகளையும்; அதோடு தொடர்புடைய பண்பாட்டு மரபுகளையும் கைவிட்டுவிட்டு ஊரை விட்டு போகமுடியாது என உறுதியாக பேசி வந்தனர். அதன் தொடர்ச்சியாக மக்கள், வெற்றியின் ஒருபகுதியாக அரிட்டாபட்டி இளமநாயகி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து குலவையிட்டும் கும்மியடித்தும் வழிபாடு மேற்கொண்டனர். இதில் அரிட்டாபட்டி பகுதி சுற்றுவட்டார மக்கள், பெரியார் ஒரு போக பாசன விவசாயி சங்கத்தினர், மேலூர் பகுதி வணிக சங்கத்தினர், டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு பொருப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வ. வரதராஜன்,
செய்தியாளர் (மேலூர்).