அரசியலில் அடுத்தடுத்த களத்திற்கு தாவி பதவி, பணம் ,புகழ் என்று வாழ்நாள் முழுவதும் சுகம் அனுபவிக்கும் அரசியல்வாதிகளிடையே தன்னை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த குருநாதரா?
பதவியோடு புகழ் வந்தடைய உயிரை கொடுத்து உழைத்த கட்சித் தொண்டர்களா? என்று பெரும் போராட்டதை மனதில் எதிர்கொண்ட குன்னம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.இராமசந்திரன் ஒரு வழியாக அரசியலிருந்தே…விலகுவதாக அறிவித்தவுடன்.

அவரது குடும்பத்தினர் அவரை சார்ந்த உறவுகள் , கட்சி தொண்டர்கள் என அனைவரும் வருத்தபடாமல் , சந்தோஷப்பட்டு ஆர்.டி.ஆரை கொண்டாடுகின்றனர். இவரது குருநாதர் ஆர்.வைத்திலிங்கம் ஓ பி எஸ் அணியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவுடன் மீடியாக்களை சந்தித்த இராமசந்திரன் தானும், தனது ஆதரவாளர்களும் விரைவில் திமுகவில் இணைவதாக அறிவித்த போது அதிர்ச்சியடைந்த குன்னம் சட்டமன்றத்திற்குட்பட்ட அதிமுக தொண்டர்கள், அவரது அபிமானிகள் சமூக வலைத்தளங்களில் உங்களை கட்சிக்கு ( அதிமுக) கொண்டு வந்த ஆ.இளவரசனை ( திருச்சி இளவரசன் ) தெரியவில்லையா? உயிரை கொடுத்து உழைத்து எம்.எல்.ஏ வாக ஆக்கிய தொண்டனை தெரியவில்லயா? உங்களை நம்பி கட்சியையும், பதவியையும் கொடுத்து அழகு பார்த்த அம்மாவை ( ஜெ) தெரியவில்லையா? வைத்திலிங்கம் மட்டும் தான் கண்ணுக்கு தெரிகிறதா? நேற்று வரை உங்களை நம்பி திமுகவை எதிர்த்த எங்களை தெரிவில்லையா? என்று,

அடுக்கடுக்காய் கேள்விகணை தொடுக்க தொடங்கினர். இமற்கெல்லாம் முத்தாய்ப்பாய் அவரது குடும்பத்திலேயே திமுகவில் இணைய எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அவர் மீது மிகுந்த பாசமுடைய ஆர்.டி.ஆரின் தாயார் உன்னை ஆளாக்கிய ஜெயலலிதா படத்தை வீட்டிலிருந்து அகற்றிவிட்டு வேறு ஒருவரின் படம் மாட்டுவாயா? இது நமக்கு அசிங்கம் இல்லையா? என வினவினாராம்.இந்த கேள்வி அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்க இன்று காலை (22.01.26 ) மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தவர் அரசியல் வாழ்விலிருந்து விலகுகிறேன். இனி எந்த கட்சியிலும் இணையும் எண்ணமில்லை என அறிவித்தார்.
மகாபாரத களத்தில் வில் எடுத்த அர்ஜீனனை பார்த்து கண்ணன் எதிரே உள்ளவர்கள் மீது அம்பை எறி என்ற போது. கண்ணா எதிரே நிற்பவர்கள் யார்? நம் இரத்த உறவுகள் அவர்களை கொன்று விட்டு இந்த மண்ணை யாருடன் ? ஆளப்போகிறேன். என கேள்வி எழுப்புவான். அரசியல் களத்தில் தன்னை நம்பியவர்களை பலி கொடுத்து விட்டு பதவி சுகம் தேவையா? என்று அரசியல் துறவறம் பூண்ட ஆர்.டி.ஆர் பெற்ற அம்மாவுக்கும், ஆளாக்கிய அம்மாவுக்கும் செய்த உண்மையான நன்றிகடன் இது தான்.!! என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.
எம்.எஸ்.மதுக்குமார்.

