`EMI செலுத்த அவகாசம் கொடுங்கள்!’- மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

0

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்றிருக்கும் கடன்களுக்கு EMI செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்கக் கோரி பிரதமர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட உள்ள முழு ஊரடங்கைச் செயல்படுத்துவது குறித்து, தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9.05.21 அன்று முதல்வர் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், ’சிறு குறு தொழில்நிறுவனங்கள், ஆட்டோரிக்ஷா, கால்டாக்சி, வாகனம் வைத்திருப்போர் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை (EMI) கட்டுவதற்கும் காலநீட்டிப்பு வழங்குவது குறித்து ஒன்றிய அரசு மற்றும் மத்திய ரிசர்வ் வங்கியிடம் வலியுறுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, அவர்களுடைய கடன் சுமையைக் குறைக்கும் வகையில், 6 மாத காலத்திற்கு அவகாசம் வழங்கிட வேண்டும் என்றும், இந்தக் காலத்திற்கு வட்டி ஏதும் வசூலிக்கப்பட கூடாது என்றும், தொழிலாளர்களிடமிருந்து மாதந்தோறும் வசூலிக்கப்படும் வருங்கால வைப்புநிதி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதித் தொகையை ஆறு மாதங்களுக்கு பிடித்தம் செய்திடக் கூடாது என்றும் வலியுறுத்தி, பிரதமருக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here