`வெடித்து சிதறிய டயர்; தூக்கி வீசப்பட்ட கிரேன் ஹெல்பர் !’- சென்னையில் பறிபோன பீகார் வாலிபரின் உயிர்

0

கிரேன் டயருக்கு பஞ்சர் போட்டு காற்று அடித்துக் கொண்டிருந்தபோது வெடித்து சிதறியது. இதில் 10 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட பீகார் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

பீகார் மாநிலம் கோபால்கன்ச் பாட்தாபர் பகுதியைச் சேர்ந்த மதுபண்டித் புர்த்தாஷ் என்பவரின் மகன் பலீந்தரா பாண்டித் (26). இவர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதில், “எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. நான் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சென்னை ஆவடி பருத்திப்பட்டில் உள்ள சுந்தரம் மூவர்ஸ் என்று நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக தங்கி வேலை செய்து வருகிறேன். கடந்த ஜனவரி 2020-ல் 20 நாள்கள் விடுமுறையில் சொந்த ஊருக்குச்சென்றேன். திரும்ப வரும்போது எனது நண்பர் ராசுசிங் மூலமாக சந்தீப் டாக்குர் என்பவரை வேலைக்காக சென்னைக்கு அழைத்து வந்தேன்.

கடந்த பிபர்வரி முதல் என்னுடன் தங்கிய சந்தீப் மடாக்குர் கிரேன் ஹெல்பராக வேலை செய்து வந்தார். கடந்த 11ம் தேதி காலை 9.30 மணியளவில் எங்கள் சூப்பர்வைஸர் டோதகன் என்னையும் சந்தீர் டாக்கூரையும் கேரனில் உள்ள டயரை கழற்றி பஞ்சர் பார்க்கும்படி கூறினார். அதன்பேரில் அவர் பார்வையிட நானும் சந்தீப் டாக்கூரும் டயர்களுக்கு காற்று நிரப்பிக் கொண்டிருந்தோம். அப்போது நான் வேறு வேலையாக பக்கத்தில் உள்ள கிரேனை பழுது பார்க்கச் சென்றேன். அப்போது சந்தீப் டாக்குர் காற்றை நிரப்பியுள்ளார். திடீரென டயர் வெடித்துள்ளது. இதில் சந்தீப் 10 அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். நாங்கள் பதறி போய் பார்த்தபோது அவனது வாய், மூக்கு மற்றும் காது வழியாக ரத்தம் வந்து கொண்டிருந்தது.

உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு சந்தீப் டாக்குர் இறந்துவிட்டதாகக் டாக்டர்கள் கூறினர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து அஜாக்கிரதையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பிரேத பரிசோதனை முடித்து சடலத்தை அவரது பெற்றோர் வர முடியாத சூழ்நிலையில் என்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நான் இந்தியில் சொன்னதை எனக்கு தெரிந்த நண்பர் மூலமாக தமிழில் எழுதி இந்த புகாரை உங்களிட் கொடுக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here