70 பவுன் நகை… 2 லட்சம் ரொக்கம்… ரூ.28 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அபேஸ்!- கொரோனா நோயாளி குடும்பத்தை பதறவைத்த கொள்ளையர்கள்

0

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதற்கு பின்னர் வீடு திரும்பியபோது அதிர்ச்சியடைந்தனர். வீட்டில் இருந்த நகைகள், பணம், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள பெரியாங்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் மல்லிகா ( 65). இவருடைய குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் அனைவரும் ஆம்பூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அவர்களுடைய வீடு பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 14 நாட்களுக்கு பிறகு தனிமைப்படுத்தும் முகாமில் இருந்து அவர்கள் நேற்று காலை வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 70 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.28 லட்சம் மதிப்பிலான பத்திரங்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கொள்ளை போன நகை-பணம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஆம்பூர் தாலுகா காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here