உயிருக்குப் போராடிய சிறுமி… தவித்த தந்தை… கரம் நீட்டிய காவலர்கள்!- சென்னையில் நடந்த மனிதநேயம்

0

இருதயம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய சிறுமி அறுவை சிகிச்சை மூலம் உயிர் பிழைத்துள்ளார். இந்த பிஞ்சியின் உயிரை காப்பாற்றிய தலைமைக் காவலர் மற்றும் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் 5 வயது மகள் கவிஷ்கா. இவருக்கு பிறக்கும் போதே இருதயத்தில் பிரச்னை இருந்ததால் ஆபத்தான கட்டத்தில் வாழ்ந்து வந்துள்ளார். சிறுமியின் தந்தை கார்த்திக் எலக்ட்ரானிக் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வருகிறார். சில மாதங்களுக்கு கவிஷ்காவுக்கு உள்ள இருதய நோயை ஆன்ஜியோகிராம் மூலம் டாக்டர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். இந்நிலையில் கவிஷ்காவுக்கு மீண்டும் உடல் நலம் பாதிப்படைந்தது. அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மீண்டும் ஒரு ஆன்ஜியோகிராம் செய்யவேண்டும் எனவும் ரூ. 30 ஆயிரம் செலவாகும் எனவும் கூறியுள்ளனர். பணம் இல்லாததால் கார்த்திக் சிகிச்சையை தள்ளிப்போட்டுள்ளார். இது பற்றி தனது பக்கத்து வீட்டில் குடியிருந்தவரான செந்தில் என்பவரிடம் கார்த்திக் தெரிவித்துள்ளார். செந்தில், சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு கார்த்திக்கின் பக்கத்து வீட்டில் தலைமைக்காவலர் செந்தில் வசித்து வந்ததால் அந்த வகையில் இருவரும் நட்பாக பழகியுள்ளனர். சிறுமி கவிஷ்காவின் நிலையைக் கண்ட செந்தில் தன்னாலும் தனக்கு தெரிந்தவர்களிடமும் ரூ. 30 ஆயிரம் பணத்தை திரட்டிக் கொண்டு வந்து கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார். உடனடியாக மகளுக்கு ஆன்ஜியோ கிராம் சிகிச்சை செய்யுங்கள் என செந்தில் கூறியுள்ளார். இந்நிலையில் சிறுமியின் உடல் நிலை மோசமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்றது. சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு உடனடியாக ஓப்பன் ஹார்ட் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் அதற்கு ரூ. 5 லட்சம் செலவாகும் எனவும் கூறிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக் சோகத்தின் உச்சிக்கே சென்று தனது செல்ல மகளை நினைத்து கவலையில் ஆழ்ந்து விட்டார். அது பற்றி கேள்விப்பட்டதும் கார்த்திக்கின் நண்பரான தலைமைக்காவலர் செந்தில் தான் பணிபுரியும் நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் தங்கராஜிடம் நடந்த விவரங்களை தெரிவித்தார். “சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். எப்படியாவது அவரது உயிரை காப்பாற்ற வேண்டும். ஆபரேஷனுக்கு ரூ.5 லட்சம் தயார் செய்து கொடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இதையத்து இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மனம் இறங்கி தன்னிடம் இருந்த ரூ. 45 ஆயிரம் பணத்தை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செலுத்தி சிறுமிக்கு உடனடியாக ஆபரேஷன் செய்யும்படி கோரினார். அதன்படி சிறுமி கவிஷ்கா அந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு 7 மணி நேரம் இருதய அறுவை சிகிச்சை நல்லபடி நடந்து முடிந்தது. மீதிப்பணத்தை இன்ஸ்பெக்டர் தங்கராஜ், தலைமைக்காவலர் செந்தில் ஆகியோர் தங்களுக்கு தெரிந்தவர்கள், நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தவர்கள் மற்றும் நண்பர்களிடம் வசூல் செய்து மருத்துவமனையில் செலுத்தினார்கள். ஆபரேஷன் முடிந்து சிறுமி நலமுடன் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

தலைமைக்காவலர் செந்தில் மற்றும் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோருக்கு சிறுமி கவிஷ்காவின் தந்தை கண்ணீருடன் கைகூப்பி நன்றி தெரிவித்தார். மரணத்தை நோக்கி பயணம் செய்த இருதய நோயின் பிடியில் சிக்கித்தவித்த 5 வயது சிறுமி, தலைமைக்காவலர் செந்தில், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோரின் மனிதநேயத்தால் காப்பாற்றப்பட்டு தற்போது தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக உள்ளார். தலைமைக்காவலர் செந்தில் மற்றும் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோரின் இந்த மனிதநேய செயல் அனைவர் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுத்தந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here