வாசன் கண் மருத்துவமனை மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் இணைந்து கேஷ்லெஸ் கண் சிகிச்சைக்கான ஒப்பந்தம் கையெழுத்து!
வாசன் கண் மருத்துவமனை & ஏஎஸ்ஜி கண் மருத்துவமனைகள், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் உடன் நாடு முழுவதும் கேஸ்லெஸ் கண் சிகிச்சைக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு மற்றும் முகவர்கள் குடும்பத்தினருக்கான இலவச கண் சிகிச்சை முகாம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வாசன் கண் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் பிரவீன் அந்தராஜ், ஆனந்த பாலா சாகிப் மற்றும் மண்டல மேலாளர் விஜயன் பிரான்சிஸ், ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் தமிழ்நாடு சீனியர் பிசினஸ் ஹெட் பாலாஜி பாபு மற்றும் திருச்சி மண்டல அதிகாரி அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஸ்டார் ஹெல்த் பாலிசி வைத்திருப்போர், இந்தியா முழுவதும் உள்ள 170 கண் மருத்துவ மையங்களில், மூக்கு கண்ணாடி மாற்று அறுவை சிகிச்சை, ரெப்ராக்டிவ் சர்ஜரி, குளோகோமா, ரெட்டினா, நீரிழிவு கண் பராமரிப்பு, கார்னியா, குழந்தைகள் கண் மருத்துவம், ஸ்குவிண்ட், கண் புற்றுநோய், விஷயோ – ரெட்டினல் சர்ஜரி, இன்ட்ரோலேஸ், ஆப்டிகல் மற்றும் கான்டாக்ட் லென்ஸ் சேவைகள் உள்ளிட்ட அதிநவீன சிகிச்சைகளை பணப்பரிவர்த்தனை இன்றி (கேஷ்லெஸ்) பெற முடியும்.
ஸ்டார் ஹெல்த் பாலிசி வைத்திருப்பவருக்கு மேம்பட்ட நன்மைகளை வழங்குவதற்காகவும், ஒரே இடத்தில் முழுமையான இன்டிகிரேடட் கண் சிகிச்சைகளை வழங்குவதற்கும், நாட்டின் கண் மருத்துவத்துறையில் ஒரு முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

