புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் ஆபத்தான நிலையில் இருந்த பேருந்து நிலைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பேருந்து நிலைய புதிய கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், பலதரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, சில மாதங்களுக்கு முன்பு பேருந்து நிலையக் கடைகள் ஏலம் விடப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த பேருந்து நிலையத்துக்கு கறம்பக்குடி வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் வந்து செல்வதால் வெயில், மழை காலத்தில் பயணிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து, பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் பேருந்துகளை உள்ளே நிறுத்தும் அளவுக்கு உயரமான தகர ஷெட் அமைக்கப்பட்டு வருகிறது.இதனால், பேருந்து நிலையக் கடைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்வதில்லை.
இந்நிலையில், ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணியை விரைந்து மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் பயணிகள் அதிகமானோர் வந்து செல்லக்கூடிய பேருந்து நிலையமாக கறம்பக்குடி பேருந்து நிலையம் உள்ளது. இங்கு ஏற்கெனவே இருந்த பாழடைந்திருந்த பேருந்து நிலையக் கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டினாலும் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கே பல மாதங்களாகிவிட்டது.
அதன்பிறகு, தற்போது கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.74 லட்சத்தில் தகர ஷெட் அமைக்கும் பணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. 6 மாதங்களில் முடிக்க வேண்டிய இந்தப் பணி, கிட்டத்தட்ட ஓராண்டை நெருங்கியும் நிறைவடையாமல், பணிகள் ஆமை வேகத்தில் மிகவும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால், பொதுமக்கள் பேருந்து நிலையத்தை பயன்படுத்த முடியவில்லை.
பேருந்துகள் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், பேருந்து பயணிகள், பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே, பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.