அரியலூர் மாவட்டம் வாரணாசி அருகே இன்று நவம்பர் 11 ந்தேதி திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரை சேர்ந்த கனகராஜ். என்பவர் இன்டோன் கேஸ் சிலிண்டர் லாரியை ஓட்டிவந்தார். திருச்சி குடோனில் இருந்து அரியலூர் டீலருக்கு லாரி முழுவதும் நிரப்பப்பட்ட கேஸ் சிலிண்டர்களை திருச்சியில் இருந்து அரியலூருக்கு ஏற்றி வந்துள்ளார். வாரணாசி அருகில் உள்ள பிள்ளையார் கோவில் வளைவில் திரும்பும் போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததை தொடர்ந்து,
ஏற்பட்ட அழுத்தத்தில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதற ஆரம்பித்தன பலத்த காயங்களுடன் லாரி ஓட்டுநர் கனகராஜ் குதித்து தப்பினார். தகவல் கிடைத்ததை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கனகராஜ் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் லாரியில் இருந்த சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து தீ பற்றி எரிய தொடங்கியதில் லாரி முற்றிலும் எரிந்து சேதமானது. வானளாவிய தீப்பிழம்பும் சிலிண்டர் வெடிப்பும் வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தியது.
அரியலூர் தீயணைப்பு நிலை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தஞ்சாவூர் திருச்சியில் இருந்து அரியலூருக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் அருகில் உள்ள மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா சாஸ்திரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்க்கொண்டனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து பார்வையிட்டு விபத்து மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து விசாரணை மேற்கொண்டார். போக்குவரத்து மற்றும் மின்சாரதுறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.
எம்.எஸ்.மதுக்குமார்.

