திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா புற்றுநோய் & மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இன்று ஸ்டோமா கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தலைமை விருந்தினராக டாக்டர் ஆர். கிஷ்வந்த் (எம்.டி., டி.எம்., கன்சல்டன்ட் காஸ்ட்ரோஎன்டரோலஜிஸ்ட், ஹெபடாலஜிஸ்ட் & இண்டர்வென்ஷனல் எண்டோஸ்கோபிஸ்ட்) கலந்து கொண்டு, புதிய கிளினிக்கினைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி. கோவிந்தராஜ் வரதனன் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் பி. சசிப்ரியா ஆகியோர் பங்கேற்றனர்.
மருத்துவர்கள் உரையாற்றுகையில், “ஸ்டோமா என்பது சில புற்றுநோய் அல்லது குடல்/சிறுநீர்ப்பை நோய்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பிறகு, நோயாளியின் உடலில் வயிற்றுப் பகுதியில் உருவாக்கப்படும் செயற்கைத் திறப்பு ஆகும். இதன் மூலம் உடலில் இருந்து கழிவுகள் வெளியேற உதவுகிறது.
இது பெரும்பாலும் கோலோஸ்டமி (பெருங்குடல்), இலியோஸ்டமி (சிறுகுடல்), யூரோஸ்டமி (சிறுநீர்ப்பை) ஆகிய முறைகளில் செய்யப்படுகிறது. இத்தகைய ஸ்டோமா கொண்ட நோயாளிகளுக்கு தினசரி பராமரிப்பு, ஆலோசனை, ஸ்டோமா பைகளின் பயன்படுத்தும் வழிமுறைகள் மற்றும் மனநலம் சார்ந்த ஆதரவு வழங்குவதற்காக ஸ்டோமா கிளினிக் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கென்று சிறப்பு பயிற்சி பெற்ற செவிலியர்களின் பராமரிப்பு மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகளின் படி இந்த கிளினிக் செயல்படும்” எனக் குறிப்பிட்டனர்.
ஹர்ஷமித்ரா மருத்துவமனை பல ஆண்டுகளாக புற்றுநோய் சிகிச்சை, பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வில் முன்னணியில் செயல்பட்டு வருகிறது. இந்த புதிய கிளினிக், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முக்கியமான சேவையாக இருக்கும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.