Thursday, October 9, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedஏற்றுமதிக்கு மாற்றுவழி காணும் சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றம்! 12, 13 தேதிகளில் சென்னையில் மாநாடு!

ஏற்றுமதிக்கு மாற்றுவழி காணும் சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றம்! 12, 13 தேதிகளில் சென்னையில் மாநாடு!

அமெரிக்காவின் 50% இறக்குமதி வரிவிதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வரும் நிலையில் அதற்கு மாற்றுவழி கண்டுள்ளது சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றம்.

இம்மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் முதல் சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது.

துபாய், குவைத், பஹ்ரைன், கத்தார், தமாம், சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மிகப்பெரும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் அந்த மாபெரும் சர்வதேச மாநாட்டில் 75க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், இந்திய பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையிலும், அந்தந்த நாடுகளில் உள்ள வர்த்தக வாய்ப்புகள் பற்றியும் ஸ்டால்கள் அமைத்து காட்சிப்படுத்த உள்ளனர்.

இது குறித்து சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றத்தின் மேலாண் இயக்குனர் செல்வம் கூறும்போது, “இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி உயர்வால் நமது ஏற்றுமதி சந்தை பெரும் சரிவை சந்தித்து வரும் நிலையில் தற்போது நடக்கவிருக்கும் இந்த சர்வதேச மாநாடு இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை சார்ந்த பல்துறை நிறுவனங்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் வரப்பிரசாதமாக அமையும் என நம்புகிறோம்.

இதில், கட்டுமானம், கனிமம், ஆட்டோ மொபைல், தளவாடப் போக்குவரத்து மற்றும் சப்ளை செயின், எண்ணெய் மற்றும் வாயுக்கள், மின்சாரம், தொழில்துறை உற்பத்தி நிறுவனங்கள், உலோகப் பொருட்கள் சார்ந்த நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், பயோ மெடிக்கல் சயின்ஸ் சார்ந்த நிறுவனங்கள்,வேதியியல் துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் என பலதரப்பட்ட மிகப் பெரும் வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் 75க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைத்து தங்களைப் பற்றி காட்சிப்படுத்த உள்ளதோடு, 70க்கும் மேற்பட்ட பல்துறை வல்லுனர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளதால் இந்திய பொருட்களுக்கு வெளிநாடுகளில் உள்ள சந்தை வளம் பற்றி நேரடியாக அறிந்து கொள்ள இது ஒரு மகத்தான வாய்ப்பாக இருக்கும் என உறுதியாக கருதுகிறோம்” என்றார்.

மேலும், சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றத்தின் இயக்குனர் முத்துக்குமார் இது குறித்து கூறும்போது,
“தற்போது அமெரிக்காவின் இறக்குமதி வரி ஏற்ற முடிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள டெக்ஸ்டைல் தொழிலுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் இந்த மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் தங்கள் நாட்டின் டெக்ஸ்டைல் தேவைகள் குறித்தும் எம்.எஸ்.எம்.இ. நிறுவன அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து தமிழக ஏற்றுமதியாளர்களுக்கு உரிய வாய்ப்பினை உருவாக்கி தருவது குறித்த திட்டம் வகுத்து வருகிறார்கள். எனவே, தமிழகத்தைச் சேர்ந்த டெக்ஸ்டைல் மற்றும் அனைத்து வகையான தொழில்துறை நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளில் உள்ள வாய்ப்புகளை வாரி வழங்கும் ஒரு வாய்ப்பாக இந்த மாநாடு அமையும்” எனக் கூறினார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்த உள்ள இந்த மாபெரும் சர்வதேச மாநாட்டில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் பொய்யாமொழி, பழனிவேல் தியாகராஜன், சிவசங்கர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், டி.ஆர்.பி. ராஜா, டி.எம். அன்பரசன், கோவி.செழியன், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த அமைச்சர் பெருமக்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தியாவில் முதன்முறையாக
பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்கும் டான்செம், தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் எம்.எஸ்.எம்.இ, டிட்கோ உள்ளிட்ட பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களின் வழிகாட்டுதலில் நடைபெறும் இந்த மாநாட்டின் போது சுமார் 3000 தமிழ் இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் பணியாற்ற உரிய பணி ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குவார் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலும் விபரங்களை அறிவதற்கும், இந்நிகழ்வில் கலந்து கொள்ளவும் 9444416900; 99944 89988 ஆகிய எண்களிலோ அல்லது itef@itefworld.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளவும் என அந்த சர்வதேச மாநாட்டிற்கான செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments