சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தமிழகத்தில் வேகமாக நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக தலைமையில் இரு அணிகள் அமையவுள்ள நிலையில், மெகா கூட்டணி அமைக்கும் பணிகளில் அதிமுக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்பதுதான் தமிழக அரசியல் வட்டாரங்களில் தற்போது சூடான விவாதமாக இருந்துவருகிறது. இரு கட்சிகள் சார்பிலும் தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை தொடர்கிறது. ஆனால் அதிமுக, பாஜக தலைவர்களோ தேமுதிக தங்கள் கூட்டணிக்கு நிச்சயம் வரும் என்று ஊடகங்களில் தினந்தோறும் பேட்டியளித்து வருகிறார்கள். இதுவரை திமுகவுடன் கூட்டணி அமைக்காத தேமுதிக 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி துவங்கி இருக்கும் நிலையில், இந்த தகவல் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2026 தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய நான்கு முனை போட்டி நிலவும் சூழலில் திமுக கூட்டணி மிக வலுவாக இருக்கிறது. 2019 தேர்தலுக்கு முன்பிருந்தே திமுக கூட்டணி தொடர்கிறது. தற்போதைய சூழலில் அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே அதிகார பூர்வமாக இருக்கிறது மற்றபடி கடந்த காலங்களில் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிக, பாமக இதுவரை தங்கள் நிலைப்பாட்டை கூறவில்லை.

பாமகவில் உட்கட்சி விவகாரம் மிகவும் சீரியஸாக போய்க் கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே சொன்னது போல மாநிலங்களவை உறுப்பினர் விவகாரம் தொடர்பாக அதிமுக மீது தேமுதிக அதிருப்தியில் இருக்கிறது. மக்களவை சீட்டு தருவதாக உறுதி அளித்து கடிதம் தரப்பட்டதாகவும் நாகரீகம் கருதி அதனை வெளியிடவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார். ஜனவரி மாதம் நடக்கும் மாநாட்டுக்கு பிறகு தான் கூட்டணி தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். இந்த நிலையில் அதிமுக கூட்டணியை பலவீனம் அடையச் செய்ய அந்த கட்சியை தங்கள் கூட்டணிக்கு அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என திமுக தலைமை விரும்புகிறது. விஜயகாந்த் இருந்தவரை திமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது, 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணி, 2021 தேர்தலில் தனி கூட்டணி அதற்கு முந்தைய தேர்தல்களில் தனித்துப் போட்டி என தேமுதிக இதுவரை திமுகவுடன் கூட்டணி அமைத்ததில்லை. இந்தநிலையில், எல்.கே.சுதீஷ் மூலம் திமுக தலைமையிடம் வாரிசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்கின்றனர் விவரம் அறிந்த தேமுதிகவினர்.

அதே நேரத்தில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லது. 2026ல் அதற்கான சாத்தியம் உள்ளது. தேர்தலில் தனித்து நிற்க முடியுமா? என்பதை காலம்தான் முடிவு செய்யும். தேமுதிகவின் வாக்கு வங்கி அப்படியே உள்ளது” என்று கூறிவருகிறார் பிரேமலதா. கூட்டணி ஆட்சி என்று திமுக கூட்டணி கட்சிகள் பேசி வரும் நிலையில், பிரேமலதாவும் இப்படி பேசி வருவது திமுக தலைமையை யோசிக்கவைத்துள்ளது. ஒரு புறம் திமுக ஆட்சிக்கு 100க்கு 50 மதிப்பெண் கொடுக்கும் பிரேமலதா, மத்தியிலும் ஆளும் பாஜக அரசை பாராட்டி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை ஜனவரியில் அறிவிப்போம் என்று பிரேமலதா கூறி வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக திமுக கூட்டணியில் இடம் பெற்றால் மட்டுமே வெற்றி பெற முடியும். அதே நேரத்தில் பாஜக- அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் தேமுதிக காணாமல் போய்விடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.