கடந்த 7ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற மாபெரும் மக்கள் போராட்டம் பெரும் பேசு பொருளாகியது. அரிட்டாபட்டி பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை முழுமையாக கைவிடக் கோரி பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மதுரையை நோக்கி பேரணி நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 5000 மக்கள் மற்றும் விவசாயிகள் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவும் செய்திருந்தனர். பல தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று 9 ஜனவரி, 2025 மாண்புமிகு. பத்திர பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா இ.ஆ.ப., மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் இ.கா.பா., ஆகியோர் அரிட்டாபட்டி மற்றும் அ.வல்லாளபட்டி பகுதியில் மக்களை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பேசிய அமைச்சர் மூர்த்தி அவர்கள், “இந்த விவகாரம் குறித்து நேற்று கூட சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் முதல்வரின் சார்பாக பேசி இருந்தார். ஏற்கெனவே அனைத்துக் கட்சி நண்பர்களும் ஒன்றிணைந்து டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் இது குறித்து பேசுகையில், இந்த திட்டம் நான் முதலமைச்சராக இருக்கும் வரை வராது. அப்படி வந்தால் நான் இந்த பதவியிலேயே இருக்க மாட்டேன் என்று உறுதி அளித்திருந்தார். எனவே ஒருபோதும் டங்ஸ்டன் திட்டம் இப்பகுதிக்கு வராது. தமிழ்நாடு அரசு அதை ஒருபோதும் அனுமதிக்காது” என்றார். அதோடு போராடிய மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் குறித்து முதல்வருடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
வ. வரதராஜன்,
மேலூர் வட்ட செய்தியாளர்.