60 அடி ஆழம்… தென்னை இலை, பூக்கள் இணைத்து அலங்காரம்!- கடலில் திருமணம் செய்த இன்ஜினீயர்

0

சென்னையில் கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் மனைவிக்கு இன்ஜினீயர் தாலி கட்டினார். கடலுக்குள் நடந்த இந்த திருமணம் நிகழ்ச்சி முதல் முறையாக இந்தியாவில் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சின்னதுரை. பிஇ பட்டதாரியான இவர், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கோயம்புத்தூர் வடவள்ளியைச் சேர்ந்தவர் ஸ்வேதா. பிடெக் பட்டதாரியான இவரும் சென்னையில் பணியாற்றுகிறார். இவர்கள் இருவருக்கும் பெற்றோர் முன்னிலையில் கடந்த 13-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்தை வித்தியாசமாக கொண்டாட சின்னதுரை முடிவு செய்தார். சின்னதுரை ஸ்கூபா டைவிங் நிச்சல் பயிற்சி பெற்றவர். அதனால் தன்னுடைய திருமணத்தை கடலுக்குள் நடத்த முடிவு செய்தார். தன்னுடைய விருப்பத்தை வருங்கால மனைவி ஸ்வேதாவிடம் கூறினார். அதைக்கேட்டு முதலில் தயங்கிய ஸ்வேதாவுக்கு சின்னதுரை தைரியமூட்டினார். பின்னர் தன்னுடைய உறவினரான ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்தனிடம் விவரத்தைக் கூறினார். அவரும் திருமணத்தை ஆழ்கடலில் நடத்த ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தார். இதையடுத்து திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது. ஆழ்கடலில் திருமணத்தை நடத்த வேண்டும் என்றால் கடல் அமைதியாக இருக்க வேண்டும். அதற்காக மணமக்கள் காத்திருந்தனர்.

-Advertisements-

இந்தநிலையில் நேற்று அதிகாலை அரவிந்தனுக்கு மீனவர் ஒருவர் போன் செய்து ஆழ்கடல் அமைதியாக இருக்கிறது. அதனால் திருமணத்தை நடத்தலாம் என்று கூறினார். உடனடியாக மணமக்கள் ஸ்வேதா, சின்னதுரைக்கு அரவிந்தன் தகவல் தெரிவித்தார். அடுத்த சில மணி நேரத்திலேயே திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மணமக்கள் ஸ்வேதா, சின்னதுரை, அழகு கலை நிபுணர், போட்டோகிராபர், மாலைகள், தாலி, பூங்கொத்து, அலங்கார பொருள்களுடன் 2 படகுகளில் 12 பேர் சென்னை நீலாங்கரை கடற்கரையிலிருந்து கடலுக்குள் புறப்பட்டுச் சென்றனர்.

பின்னர், 5 மீட்டர் தூரத்தில் படகு நிறுத்தப்பட்டது. மணமக்கள் ஸ்வேதா, சின்னதுரை மற்றும் கடலுக்குள் செல்ல தயாராக இருந்தவர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் தண்ணீருக்குள் பாதுகாப்பாக இருக்க அனைத்து உபகரணங்களுடன் ஆழ்கடலுக்குள் சென்றனர். இந்து முறைப்படி திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தால் மணமகள் ஸ்வேதா சேலையிலும் மணமகன் சின்னதுரை பட்டு வேட்டியிலும் கடலுக்குள் சென்றனர். அங்கு 60 அடி ஆழத்தில் தென்னை இலை, பூக்கள் இணைத்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சேலை, வேட்டி, பூக்கள் தண்ணீரில் மேலே வராமலிருக்க அலுமினிய குண்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. தாலி கூட மேலே வராமலிருக்க அலுமினிய மற்றும் பேஸ்ட்கள் ஓட்டப்பட்டிருந்தன. அடுத்து தண்ணீருக்குள் சென்ற மணமகன் சின்னதுரை, மணமகள் ஸ்வேதாவுக்கு மாலை அணிவித்தார். அதைப் போல ஸ்வேதாவும் சின்னதுரைக்கு மாலை அணிவித்தார். அடுத்து தண்ணீருக்குள் இருந்தபடியே சின்னதுரை, ஸ்வேதாவின் கழுத்தில் தாலியைக் கட்டினார். இருவரும் அங்கிருந்தவர்களுக்கு கைகளால் வணக்கம் என கூறினர். அதன்பிறகு அனைவரும் மேலே வந்து படகில் அமர்ந்தனர். அங்கு மணமக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். 40 நிமிடங்கள் இந்த திருமண நிகழ்வு நடந்தது. பின்னர் அனைவரும் கரைக்கு படகில் திரும்பினர். கடலுக்குள் இந்து முறைப்படி இந்தியாவிலேயே முதல் தடவையாக இந்தத் திருமணம் நடந்திருக்கிறது. இந்த திருமண போட்டோக்களை மணமக்களின் உறவினர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். திருமணம் என்றாலே மாப்பிள்ளை தோழன், தோழிகள் இருப்பார்கள் அல்லவா. ஆழ்கடலுக்குள் நடந்த திருமணத்திலும் சின்னதுரைக்கு மாப்பிள்ளை தோழனாக சந்துருவும் ஸ்வேதாகவுக்கு தோழியாக தீபிகாவும் கடலுக்குள் சென்றிருந்தனர்.

அரவிந்தன் கூறுகையில், “மாப்பிள்ளை சின்னதுரை என்னுடைய உறவினர். ஆரம்பத்தில் கடலுக்குள் திருமணம் செய்ய ஸ்வேதா மற்றும் அவரின் குடும்பத்தினர் தயங்கினர். ஆனால் ஸ்வேதாவுக்கு சில நாள்கள் பயிற்சி அளித்தப்பிறகு அவர் தைரியமாக இந்தத் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார். இந்தத் திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். அடுத்த திருமணத்துக்கான ஆர்டர் வரத் தொடங்கிவிட்டது” என்றார்.

மாப்பிள்ளை சின்னதுரை கூறுகையில், “கடல் மாசுபதைத் தடுக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும்தான் கடலுக்குள் எங்களின் திருமணத்தை நடத்தினேன். சந்தோஷமாக இருக்கிறது. பிளாஸ்டிக் பொருள்களால் கடல் மாசுபடுவதைத் தடுக்க வேண்டும். ஜனவரி மாதத்தில் திருமணத்தை நடத்த அழைப்பிதழ் அச்சடித்தோம். ஆனால் கடல் அமைதியாக இல்லை. அதனால் பிப்ரவரியில் தேதி குறிப்பிடாமல் மீண்டும் ஒரு திருமண அழைப்பிதழ் அச்சடித்தோம். ஆனால் பிப்ரவரி 1-ம் தேதியே திருமணத்தை நடத்த சாதகமான சூழல் கடலில் இருந்தது. அதனால்தான் நாங்கள் அச்சடித்த திருமண அழைப்பிதழில் கூட தேதியைக் குறிப்பிடவில்லை” என்றார்.

-Advertisements-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here