`300 க்யூப்ஸ்களைப் பயன்படுத்தி எவர்க்ரீன் நடிகரை வரைந்தேன்’- ரஜினி வாழ்த்தால் கேரள சிறுவன் பூரிப்பு

0

கேரளாவைச் சேர்ந்த சிறுவன் அத்வைத் க்யூப்களைப் பயன்படுத்தி நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படத்தை வரைந்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் சிறுவன் அத்வைத் மானஷி. இவர் கொச்சியில் உள்ள பவன்ஸ் ஆதர்ஷா வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் அத்வைத் க்யூப்ஸ்களை பயன்படுத்தி புகைப்படங்களைப வரைவதில் ஆர்வம் கொண்டவர். இந்த நிலையில், சிறுவன் அத்வைத் நடிகர் ரஜினிகாந்தின் உருவப்படத்தை க்யூப்ஸ்களைப் பயன்படுத்தி வரைந்து அசத்தியுள்ளார். அத்வைத் தான் வரைந்த ரஜினியின் க்யூப் உருவப்படத்தை இணையத்தில் பதிவிட்டதையடுத்து அது சமூக ஊடகங்களில் வைரலானது.

ரஜினி க்யூப்ஸ் உருவப்படம் குறித்து சிறுவன் அத்வைத் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஜினிகாந்த் சாரின் ரூபிக்ஸ் கியூப் மொசைக் உருவப்படம்! 300 க்யூப்ஸ்களைப் பயன்படுத்தி எவர்க்ரீன் நடிகரை வரைந்தேன். இது எனக்கு மகிழ்ச்சியையும் ஆசீர்வாதத்தையும் அளிப்பதாக உணர்கிறேன். நான் அத்வைத் மானஷி, பவனின் ஆதர்ஷா வித்யாலயா, கொச்சி, கேரளாவின் 9ம் வகுப்பு மாணவன்!” என்று குறிப்பிட்டிருந்தார்.

சிறுவன் அத்வைத் க்யூப்ஸ்களைப் பயன்படுத்தி ரஜினிகாந்த்தின் உருவப்படத்தை வரைந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இது ரஜினிகாந்த்தின் பார்வைக்கும் சென்றது. சிறுவனின் திறமையைக் கண்டு வியந்த ரஜினிகாந்த், ஆடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “சூப்பர்ப் அத்வைத்… காட் பிளஸ் யூ” என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சிறுவன் அத்வைத்துக்கு ஆடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரஜினியின் புகைப்படத்தை க்யூப்ஸ் மூலம் வரைந்த சிறுவனுக்கு ரஜினி ரசிகர்களும் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தனக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்துக்கு சிறுவன் அத்வைத் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அத்வைத் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஜினிகாந்த் சார், உங்கள் ஆடியோ செய்திக்கு மிக்க நன்றி! இது உங்களிடமிருந்து கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதமாக நான் கருதுகிறேன். இதை என் வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாப்பேன். உங்களுக்கு எனது அன்பு. நன்றி சார்” என்று தெரிவித்துள்ளார்.

சிறுவன் அத்வைத் இதற்கு முன்பு, பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மம்முட்டி, சுரேஷ்கோபி, சல்மான்கான், பாடகி சித்ரா உள்ளிட்ட பலருடைய உருவப்படங்களை க்யூப் மூலம் வரைந்துள்ளார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here