27 பேருக்கு ஆயுள் தண்டனை!- கச்சநத்தத்தில் 3 பேர் படுகொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0

கச்சநத்தத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 65), சண்முகநாதன்(31), சந்திரசேகர் (34) ஆகிய 3 பேரும், கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 28-ந்தேதி இரவு படுகொலை செய்யப்பட்டனர். கோவில் திருவிழாவில் மரியாதை அளிப்பது தொடர்பான முன் விரோதத்தில் வேறு ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இவர்களை வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களில் தனசேகரன் (32) என்பவர் சம்பவம் நடைபெற்று 1½ ஆண்டுக்கு பிறகு இறந்தார். இந்த வழக்கில் ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவர்களில் 2 பேர் வழக்கு விசாரணையின் போது இறந்து விட்டனர். 3 பேர் சிறுவர்களாக இருந்தனர். ஒருவர் தலைமறைவானார். இதனால் மீதமுள்ள 27 பேர் மீது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில், இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என கடந்த 1-ம் தேதி கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், கச்சநத்தம் 3 பேர் படுகொலை வழக்கில் குற்றவாளிகள் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி முத்துக்குமரன் அதிரடி தீர்ப்பளித்தார். இதையடுத்து, குற்றவாளிகள் 27 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here