சேலத்தில் அதிமுக பிரமுகர் இளங்கோவன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 21 கிலோ தங்கம், 282 கிலோ கிராம் வெள்ளிப் பொருட்கள், 29 லட்சம் ரொக்கம், 10 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன் வீட்டில் சோதனை நடத்தினர். அவருக்கு சொந்தமான ஆத்தூர் அருகே உள்ள பத்திரகவுண்டம் பாளையத்தில் உள்ள வீடு மற்றும் சொந்தமான 27 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இளங்கோவன் மற்றும் அவர் மகன் பிரவீண் குமாருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 21.2 கிலோ தங்கம், 29 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் 10 சொகுசு கார்கள், இரண்டு சொகுசுப் பேருந்துகள், 3 கணினி ஹார்ட் டிஸ்க்குகள், சொத்துக்கள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 282 கிலோ கிராம் வெள்ளிப் பொருட்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. இளங்கோவன் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.