`2007ல் கேப்டன்சியை எதிர்பார்த்தேன்!’- மனம் திறந்த யுவராஜ் சிங்

0

2007-ம் ஆண்டின் 50 ஓவர் உலகக்கோப்பை தோல்விக்குப்பிறகு இந்திய அணியை மீட்டெடுக்கவும் தொடக்க டி20 உலகக்கோப்பைக்கான கேப்டனாக புதிதாக ஒருவரை அறிவிக்கவும் பிசிசிஐ முடிவெடுத்திருந்த அந்த நேரத்தில் தோனிக்கு முன்பாக தனக்கு கேப்டன்சி அளிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன் என்று யுவராஜ் சிங் மனம் திறந்துள்ளார்.

22 யார்ன்ஸ் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய யுவராஜ் சிங், “இந்தியா அப்போதுதான் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை இழந்திருந்தோம். இந்திய கிரிக்கெட்டின் குழப்பம் நிறைந்த காலக்கட்டம் அது. அதன் பிறகு 2 மாதகால இங்கிலாந்து பயணம். இடையே தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்துக்கு ஒரு மாதகால பயணம். இதோடு தொடக்க டி20 உலகக்கோப்பையும் இருந்தது. அதாவது தொடர்ச்சியாக 4 மாதங்கள் இந்தியாவிலிருந்து வெளியே இருக்க வேண்டும். எனவே அப்போது மூத்த வீரர்கள் பிரேக் எடுத்துக் கொள்ள நினைத்தார்கள். டி20 உலகக்கோப்பைத் தொடரை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

டி20 தொடரில் எனக்கு கேப்டன்சி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தேன், பரவலாக அப்படி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எம்.எஸ்.தோனி கேப்டன் என்று அறிவிக்கப்பட்டது. யார் கேப்டன் என்பதெல்லாம் கவலையில்லை. நம் 100% ஆதரவு யாராக இருந்தாலும் உண்டு, அது ராகுல் திராவிடாக இருந்தாலும் கங்குலியாக இருந்தாலும் சரி, அணிக்கான வீரராக இருக்கவே விரும்புவோம். கங்குலி, திராவிட், சச்சின் ஓய்வு எடுத்துக் கொண்டனர். ஜாகீர் கான் என்னையும் ஓய்வு எடுக்கச் சொன்னார். முதல் ஆட்டம் வெஸ்ட் இண்டீஸுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே அல்லவா?

கிறிஸ் கெய்ல் 50-55 பந்துகளில் சதமெடுத்தார். அன்று இரவு ஜாகீர் கான் எனக்கு மெசேஜ் செய்தார். ‘நன்றி நான் தொடரிலிருந்து ஓய்வு எடுக்க அனுமதி கிடைத்தது’ என்று தனக்கு கிடைத்த ஓய்வை எண்ணி நிம்மதி மெசேஜ் அனுப்பினார். ஆனால் கோப்பையை வென்றவுடன் இதே ஜாகீர் கான், “இல்லை, நான் ஓய்வு எடுத்திருக்கக் கூடாது” என்றார்.

நாங்கள் ஒரு இளம் அணி. பன்னாட்டு பயிற்சியாளர் இல்லை, பெரிய பெயர்களும் இல்லை. லால்சந்த் ராஜ்புட் எங்கள் பயிற்சியாளர். வெங்கடேஷ் பிரசாத் பவுலிங் கோச் என்று நினைக்கிறேன். இளம் கேப்டனின் கீழ் இளம் அணியாக இருந்தோம். யாருக்கும் எதுவும் தெரியவில்லை. டி20 கிரிக்கெட் உத்திப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. எனவே எங்களுக்கு தெரிந்த பாணியில் ஆட முடிவெடுத்தோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here