1,212 தமிழக அரசு ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம்!- சம்பளம் ரூ.40,000 ஆக உயர்வு

0

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர்களின் மாத ஊதியம் ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,212 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டது. இரண்டு வருட ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்த பணியாளர்களாகவே தொடர்ந்தனர். இதனால் செவிலியர்கள் கடும் மனஉளைச்சலில் பணியாற்றி வந்தனர். பின்னர், அவர்களது ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. ஆனால், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கடந்த ஆட்சியில் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில், புதிதாக திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. அதன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார். இதனிடையே, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த சூழ்நிலையில், 2015-16ல் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,212 செவிலியர்களுக்கான ஒப்பந்தம் நாளையுடன் முடியவிருந்த நிலையில் அவர்களை பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பணி நிரந்தரம் செய்யப்பட்டதால் 1,212 பேருக்கான ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதிக்கு முன்னதாக 1,212 பேரும் சென்னையில் பணியில் சேர வேண்டும் என்றும் பின்னர் 1,212 பேரும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here