திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார். இவரது வீடு காங்கயம் ரோடு, புதுார் ரோடு பகுதியில் உள்ளது. தற்போது அங்கு ஒரு பகுதியில் வீடு விரிவாக்கம் செய்யும் வகையில் கட்டுமானப் பணி நடக்கிறது. இந்த கட்டுமானப் பணிக்கு வீட்டு மின் இணைப்பை பயன்படுத்துவதாக மின் வாரிய பறக்கும் படையினருக்கு தகவல் சென்றது. இதையடுத்து அங்கு சென்ற மின் வாரிய பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர். வீட்டு மின் இணைப்பில் கட்டுமானப் பணி நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த முறைகேட்டுக்கு 42,500 ரூபாய் அபராதம் விதித்து அந்த மின் இணைப்பை மின் வாரியத்தினர் துண்டித்தனர்.
ஒரு புதிய கட்டிடத்தைக் கட்டும்போது, சிமெண்ட் கலவை இயந்திரம், மின்சார வெட்டும் கருவிகள் போன்றவற்றை இயக்க தற்காலிக மின் இணைப்பு பெறுவது கட்டாயமாகும். ஆனால் புதிய கட்டுமானப் பணிகளுக்கு, வீட்டு இணைப்பைப் பயன்படுத்துவது விதிமீறலாகும். ஏற்கெனவே இருக்கும் வீட்டில் 2,000 சதுர அடிக்குள் கூடுதல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டால், அதற்குத் தனியாக தற்காலிக மின் இணைப்பு பெறத் தேவையில்லை என உள்ளது.. அதேநேரம் கட்டுமானப் பணி 2,000 சதுர அடிக்கு மேல் இருந்தால், கண்டிப்பாகத் தற்காலிக மின் இணைப்புப் பெற வேண்டும் என்பது விதிமுறையாகும்.
எனவே மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது, விதிமீறல் கண்டறியப்பட்டதால், வீட்டு உபயோகக் கட்டண விகிதத்திற்குப் பதிலாக, அதிகமான வணிக ரீதியான இணைப்புக்கான கட்டண விகிதத்தில் கூடுதலாக மின்சாரத்தைப் பயன்படுத்தியதாகக் கணக்கிடப்பட்டு, அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மேயர் தினேஷ்குமார் மின்சாரம் திருடியது குறித்து பொதுமக்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
