சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு விடைத்தாளில் “ஜெய் ஸ்ரீ ராம்” என மட்டுமே எழுதிய மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றது பேசுபொருளாகியுள்ளது.
சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலம், ஜான் பூரில் உள்ள வீர பகதூர் சிங் கூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் குறிப்பிட்ட நான்கு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றது சக மாணவர்களுக்கிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. சந்தேகத்தின் பேரில் அவர்கள் விடைத்தாள்களை மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அவர்களின் விடைத்தாள்களை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
அந்த நான்கு மாணவர்களின் விடைத்தாள்கள் முழுவதும் “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற வாசகமும், சில கிரிக்கெட் வீரர்களின் பெயர்களுமே இடம் பெற்றுள்ளது. இருப்பினும் அந்த விடைத்தாள்களை திருத்தி முழு மதிப்பெண் அளித்து அவர்களை தேர்ச்சி பெற செய்தது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த சம்பவத்தை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கொண்டு செல்லவே, அந்த நான்கு மாணவர்களுக்கும் மறு தேர்வு வைக்கப்பட்டது. அந்த மறு தேர்வில் அந்த குறிப்பிட்ட மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றனர். அதுமட்டுமின்றி அவர்களின் விடைத்தாள்களை திருத்திய இரண்டு ஆசிரியர்கள் விசாரணை செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
விடைத்தாள்கள் முழுவதும் “ஜெய் ஸ்ரீ ராம்” என எழுதிய விடைத்தாளையும் திருத்தி, முழு மதிப்பெண் அளித்து, 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி அளித்த இரண்டு ஆசிரியர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தால் பணியை நீக்கம் செய்யப்பட்டனர்.
அ.காவியன்
செய்தியாளர்